சாத்தான்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சீர்காட்சி விஜயராஜபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(62) இன்று காலை அவரது பேரனுடன் மீன் வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். மீன் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே மர்மநபர் நின்றுள்ளார்.
இதனையடுத்து மூதாட்டி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் திரண்டனர். தொடர்ந்து வீட்டிற்குள் நின்றவரை பிடித்து விசாரிக்கும் போது, முன்னுக்குபின் முரணாக பேசியதுடன், தான் போலீஸ்காரர் எனவும், ஒரு பெண்ணை தேடி வந்தாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே அந்த பகுதியில் ஆடு, நகை, கோயிலில் உண்டியல் திருட்டுகள் நடந்த நிலையில் சிக்கியவர் குறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து பொதுமக்களிடம் சிக்கிய வாலிபரை மீட்டு விசாரித்த போது அவர் திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முத்து மகன் கற்குவேல்(33) என்பதும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பணியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








