நேஷனல் ஹைவேசில் வாகனங்களை மறித்து விபத்துக்கு வழிவகுக்கும் நெல்லை போலீசார்

0
234

நெல்லை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் இயங்குகின்றன. இதில் பொன்னாக்குடி அருகே ஆண்டுக்கணக்கில் ஆறப்போட்டிருந்த நதிகள் இணைப்பு பால வேலையால் போக்குவரத்து தொடர்ந்து ஸ்தம்பித்து வந்தது.

சிறிது காலத்துக்கு முன்புதான் பாலவேலை ஓரளவு முடிந்து சிறிது நெரிசல் குறைந்தது. அந்த நேரம் பார்த்து வாகன சோதனை நடத்தி கல்லா கட்ட அந்த லொக்கேஷனை தேர்ந்தெடுத்துள்ளனர் நெல்லை முன்னீர்பள்ளம் போலீசார்.

‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை’ என்ற கதையாக சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்க, குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்க, அதையெல்லாம் கவனிப்பதை விட நெடுஞ்சாலை வசூலில் தீவிரம் காட்டுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன சோதனை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு புறம்பாக இந்த சோதனை நடக்கிறது.

‘கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ என்பதுபோல், அந்தவழியாக வரும் கனக ரக வாகனங்களே இவர்களின் குறியாக இருக்கின்றன. பெர்மிட் இருந்தாலும் பேரம் பேசி கறந்துவிடுகின்றனர். இரசீது மட்டும் கிழிப்பதில்லை.

சரியில்லாத இடத்தில் நின்று திடீரென வாகனங்களை மறிப்பதால் பின்னால் வரும் வாகனங்கள் மட்டுமல்ல, முன்னால் வரும் வாகனங்கள் கூட நேருக்கு நேராக மோதும் அபாயம் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த களேபரத்தில், மறுபுறத்தில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகனங்கள் அனுமார் வாலாய் அணிவகுத்து நிற்கின்றன. தினமும் இந்த தொந்தரவு என்பதால் அவ்வழியாக பேருந்தில் அலுவலகம் வரும் ஊழியர்கள் அவதியடைகின்றனர். வேலைக்கு செல்பவர்கள், அவசரமாக மருத்துவமனைக்கு செல்லவேண்டியவர்கள் பெரிதும் துன்பமடைகின்றனர்.

பெரும்பாலும் அலுவலக நேரங்களே சோதனை நேரங்களாக இருப்பதால் அலுவலர்கள் திட்டும், மாணவர்கள் குட்டும் வாங்கவேண்டியிருக்கிறது.

மிகவும் பரபரப்பான ஒரு தேசிய நெடுஞ்சாலையில், அதுவும், இன்னும் கால்வாய் பால வேலை முடிந்து போக்குவரத்து சரியாகாத மோசமான இடத்தில் நின்றுகொண்டு சோதனை நடத்துவதால் இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத சிலந்திவலைச் சிக்கல் உருவாகிறது.

எனவே, உயர் அதிகாரிகள் நெடுஞ்சாலை விதிமுறைகளை பின்பற்றி இந்த சோதனையை நிறுத்த வேண்டும். கனிம வாகனங்களைப் பற்றி சரியாக விசாரிக்காமலும், கனிம, வருவாய் துறைக்கு தெரியாமலும் அவர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக தண்டம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும். உலக்கைக்கும் உரலுக்கும் இடையே இடிபடும் நெல்லை இருவருக்கும் இடையே சிக்கி சின்னாபின்னப்படும் அப்பாவி பயணிகளை விடுவிக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here