ஐஸ்கிரீமில் மது கலப்பு? கோவையில் கடைக்கு சீல்

0
297

கோவையில் பி.என்.பாளையம், அவினாசி சாலையில் ரோலிங் டப் கஃபே  எனும் ஐஸ் கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மதியம் புகார் பெறப்பட்டது. கோவை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

அதன்படி உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டன. காலாவாதியான உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும் ஆய்வின்போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை. உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது. முறையான பூச்சி தொற்று நீக்கம் செய்து அதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. மேலும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறப்படவில்லை.

அதேபோல உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறைஅணிந்து பணிபுரியவில்லை என்றும் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது கண்டறியப்பட்டது . உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பன கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில் ரோலிங் டப் கஃபே எனும் ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பெயரில்  தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காபியில் போதைப்பொருள் கலந்ததாக புகார் எழுந்த  சம்பவத்திற்கு பிறகு தற்போது ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்றதான புகார் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here