தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பண்பண்ணையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் பூல்பாண்டியன்(28). பூல்பாண்டியன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முத்துராணி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருப்பசாமி என்ற கதிர்(5), உதயபாலா(2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த வாரம் பூல்பாண்டி முத்துராணி தம்பதியினரிடம் இரண்டு மகன்களுக்கும் அதே பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவிலில் வைத்து முடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக கணவன் மனைவி தரப்பு உறவினர்களையும் அழைத்து தடபுடலாக நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
தற்போது பந்தல் முதல் உணவு சமைத்தவர்கள் என அனைவருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று கணவர் பூல்பாண்டி மனைவி முத்துராணியின் நகைகளை கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்துள்ளார். இந்த பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையில் இன்று காலை வடக்கு தோழப்பண்பண்ணை பகுதியில் இலவச பட்டா கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசல் போடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு சென்றும் பூல்பாண்டி நகைகளை கேட்டுள்ளார். அதற்கு முத்துராணி உங்கள் அம்மாவிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இருவருக்கும் வாய் தகறாறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பூல்பாண்டி தான் வைத்திருந்த துண்டால் மனைவி முத்துராணி கழுத்தில் போட்டு இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதற்கிடையில் அங்கு நின்றவர்கள் பூல்பாண்டியன் ஓடுவதை பார்த்து சந்தேகத்துடன் அந்த குடிசலுக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு முத்து ராணி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனே ஸ்ரீவைகுண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்து ராணியின் உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவர் பூல்பாண்டியனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









