ஒரு காலத்தில் கூட்டணி கட்சிகள் என்ன,சொந்த கட்சி கூட தன் தொண்டனின் குற்றத்தை பொறுத்துக் கொள்ளாது, அதற்கு துணையும் நில்லாது. ஆனால் இன்று அரசியல் பின்னணியே குற்றப் பின்னணியாக மாறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாபு ஆகியோரின் தீண்டாமை கொடுமையால் நஞ்சருந்தி மடிந்த சுடலையின் மரணத்திற்கு அனைத்து கட்சிகளும் நீதி கேட்ட பின்பு முறையான வழக்குப் பதிவு விசாரணை போன்றவை நடந்தன.
அதன் பின்பும் குற்றவாளிகளை தேடிச் செல்வதில் தாமதமானது. சுடலையின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்பி உறுதி அளிக்கும் வரை குற்றவாளிகளை நெருங்குவார்கள் என்ற நம்பிக்கையே மக்களிடம் இல்லை.
இந்நிலையில், 23 நாட்களுக்கு பின்பு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆயிஷா கல்லாசி சரணடைந்தார்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு உடந்தையாகவும் துணையாகவும் இருப்பவர்களை கைது செய்யலாம் என சட்டம் கூறும் நிலையில், கல்லாசிக்கு ஏடிஎம் கார்டுகளை தானம் செய்த இருவர் கைதான சூழலில், தீண்டாமை வன்கொடுமை குற்றச்சாட்டில் இருக்கும் அவருக்கு வேறு எவரும் உதவ மாட்டார்கள் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் இருந்தது.
ஆனால், அதை பொய்யாக்கும் விதமாக, விளம்பரமோ, அறிவிப்போ கொடுத்து அழைத்து வந்தது போல், முன்னேற்பாடாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து,கல்லாசிக்கு அரண் அமைத்து பாதுகாப்பு வழங்கினர்.
அதுமட்டுமின்றி, பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு தடுத்து நின்றனர்.
சமூக நீதி காவலர்களின் கட்சியாக கூறிக் கொள்ளும் திமுகவின் உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவே கூட்டணி தர்மத்துக்கு ஏற்றவாறு அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
உடன்குடி தேர்வு நிலை பேருராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி பங்காளன் (திமுக) ராஜேந்திரன் (திமுக) பிரதிப் கண்ணன் (திமுக) முகம்மது ஆபித் (மனிதநேய மக்கள் கட்சி) பாலாஜி (சமத்துவ மக்கள் கழகம்) ஆகியோர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை ஆயிஷா கல்லாசியின் மெய் காவலர்களாக பணியாற்றினர்.
ஆயிஷா கல்லாசியின் 'அஞ்ஞாத' வாசத்தின் போது அவருக்கு ஏடிஎம் கார்டு கொடுத்து உதவிய இருவரை கூட கைது செய்து கடமை உணர்வை காட்டிய காவல்துறை திருச்செந்தூரில் அவரை பாதுகாத்த கட்சியினருக்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்து பூரிப்பு அடைந்தது.
மேலிட ஆசிி இல்லாமல் இது நடக்காது. இந்த நடவடிக்கை திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்் என்றுபொதுமக்கள்் தெரிவித்தனர.








