தூத்துக்குடியில் வட்டிக்கடை நடத்திய வக்கீல் வெட்டிக்கொலை

0
5208

தூத்துக்குடி அய்யனடைப்பு சோரீஸ்புரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு மகன் முத்துக்குமார் (43). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கடையில் இருந்தபோது 3 பைக்குகளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

தகவல் அறிந்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கடந்த 2003ஆம் ஆண்டு வெங்கடேஷ் பண்ணையாரின் ஆதரவாளரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஆத்திப்பழம் என்பவர் சோரீஸ்புரம் செங்குளத்தில் கொன்று புதைக்கப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் முத்துக்குமாரும் அவரது தம்பி சிவா என்ற சிவகுமாரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி 2ஆவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணைக்கு 2019 ஆகஸ்ட் 21ஆம் தேதி தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜராவதற்காக சிவகுமார் சென்றார். தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தின் பின்புறம் கோர்ட்டுக்கு செல்லும் சிறிய சந்து வழியாக சிவகுமார் செல்ல முயன்றார்.

அவர் ரோட்டை கடக்கும் போது அங்கு 3 பைக்குகளில் வந்த கும்பல் தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கு விசாரணையில், வெங்கடேஷ் பண்ணையாரின் ஆதரவாளரான ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்க சிவகுமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடையதாக கருதப்பபட்ட ராஜேஷ், பீட்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் உள்ளிட்டவர்களை ஜாமினில் வெளியில் வரமுடியாத அளவில் நீதிமன்றம் மூலம் வழக்கறிஞர் முத்துகுமார் தடுத்து வந்தாராம். இந்தநிலையில் இன்று வழக்கறிஞர் முத்துகுமார் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here