திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் கிராம மேம்பாட்டு சங்கத் தலைவர் மற்றும் ஊர் தலைவர் இசக்கிமுத்து பாண்டியன் தலைமையில், வெங்கடாசலபுரம் முத்துப்பாண்டி, துறையூர் ஊர் தலைவர் இலோசியஸ், ராஜபதி ஒன்றியக் கவுன்சிலர் உச்சிமாகாளி ஆகியோர் முன்னிலையில் கிராம மக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணுவிடம் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா, பிராஞ்சேரி கிராமம் கங்கைகொண்டான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தில் 1200 வீடுகள் உள்ளன. இந்த ஊரை சுற்றி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் தென் பகுதியில் சுமார் 1500 ஏக்கர் நிலத்தையும், கீழ்ப்புறத்தில் 1000 ஏக்கர் நிலத்தையும் சிப்காட் நிறுவனத்திற்கு “நில ஆர்ஜிதம்” செய்ய சர்வே செய்யும் பணி நடைபெற்றது.
“சிப்காட்” நிறுவனத்திற்காக இந்த விவசாய நிலத்தை “நில ஆர்ஜிதம்” செய்தால் இந்த பகுதிகள் உள்ள மக்கள் புலம்பெயர்ந்து செல்வதை விட வேறு வழி இல்லை. மேலும் நாங்கள் பூமியில் இருப்பதை விட இறப்பதே மேல். வெங்கடாச்சலம் கிராமத்திற்கு அருகிலுள்ள பிராஞ்சேரி, கங்கைகொண்டான், சித்தார்சத்திரம் போன்ற கிராமங்களில் ஏற்கனவே 2500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் நிறுவனத்திற்கு “நில ஆர்ஜிதம்” செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த வேலை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அரசுக்கு நிலத்தை ஒப்படைத்தவர்களுக்கும் கூட எந்த பணிவாய்ப்பும் வழங்கப்படாததால் அவர்கள் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, மீண்டும் “நில ஆர்ஜிதம்” செய்யும் முடிவை கைவிட வேண்டும். ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட பகுதியில் சிப்காட் விஸ்தரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.









