விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் வகையில் கிறிஸ்துவர்கள் ஜெப யாத்திரை நடத்த வேண்டும் என துண்டு பிரசுரம் வெளியிட்ட மத போதகர் டேவிட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை தடாகம் ரோடு கே என் ஜி புதூர் பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பால்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டேவிட். இவர் பல்வேறு நகரங்களுக்கு சென்று கிறிஸ்தவ மத பிரச்சாரங்களை செய்து வந்தவர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிரியார் வி.டேவிட் துண்டுப்பிரசுரம் ஒன்றை அடித்து வெளியிட்டிருந்தார்.
அதில், ‘கிறிஸ்தவர்களே, செப்டம்பர் பத்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் வாழும் ஊர்களில் அல்லது பகுதிகளில் வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும். இந்த சிறப்பு ஜெப யாத்திரையை கடந்த 3 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி அன்று நடத்தி வருகிறோம். கடந்த 2017 ஆம் ஆண்டு 200 வாகனங்களிலும், 2018 ஆம் ஆண்டு 1000 வாகனங்களிலும் இந்த ஜெப யாத்திரை நடத்தப்பட்டது.2019 ஆம் ஆண்டிலும் ஜெப யாத்திரை நடத்தினோம். இதன் விளைவாக கலெக்டர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகளின் அளவு களுக்கும் சிலைகள் வைக்கப்படும் இடங்களுக்கும் ஊர்வலம் நடத்தப்படும் வழித்தடம், நேரம் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இது நாம் செய்த ஜெபத்தின் விளைவுதான் என நம்புகிறேன்.
இந்த ஆண்டு அதைவிட சிறப்பாக செப்டம்பர் 8,9 அல்லது 10ஆம் தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் உங்கள் பகுதியில் இந்த ஜெப யாத்திரையை நடத்துங்கள்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் மதக்கலவரத்தை தூண்டும் விதத்திலும், பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று பல்வேறு இந்து அமைப்புகள் நேற்று துடியலூர் ஸ்டேஷனில் கோரிக்கை விடுத்தனர்.
இவர் மீது இந்து முன்னணியின் கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் என்பவர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய துடியலூர் போலீசார் பாதிரியார் டேவிட்டை தடாகம் சாலையில் உள்ள அவரது வீட்டில் சுற்றி வளைத்து இன்று காலை 5 மணிக்கு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் டேவிட் திருநெல்வேலி மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டவர். இவருக்கு குணசீலி என்ற மனைவி மற்றும் ஸ்வானி என்ற மகள் உள்ளனர். கடந்தமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்த இவர் ஒரு சில ஆண்டுகளிலேயே அந்த பள்ளியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைத்துக் கொண்டு தனியாக கல்வி நிறுவனத்தை தொடக்கி அப்போதே சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தில் இவர் ஈடுபட்டு வந்ததும் அதன் தொடர்ச்சியாக தற்போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் அடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














