மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம், திருப்பாலை,டிவிஎஸ் நகர், தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல் கூடல்புதூர் மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பகல்நேரங்களில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு வந்த புகாரையடுத்து அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணை அடிப்படையில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்பவரை கைது செய்த தனிப்படையினர் அவரிடம் நடத்திய விசராணையில் கார்த்திக் சென்னையிலிருந்து பேருந்தில் மதுரைக்கு வந்து எதவாது ஒரு பகுதிக்கு பகலில் நடந்துசென்று பூட்டியிருக்கும் வீடுகளில் தனது கைரேகை பதிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கால்களை மட்டுமே பயன்படுத்தி பூட்டை உடைத்து வீடுகளில் உள்ள பணம் நகைகளை கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது

இதேபோன்று மதுரைக்கு 15முறை வந்து 15வீடுகளில் கொள்ளையடித்து சென்னைக்கு சென்று கார், இரு சக்கர வாகனம் என வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து இரவு நேரங்களில் திருநங்கைகள் போல நடித்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆள் நடமாட்டத்தை கண்டறிந்து பகல் நேரங்களில் ஆளில்லாத வீடுகளுக்கு சென்று நகை பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.
இதேபோன்று 7வீடுகளில் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்த்தையடுத்து இருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாநகரில் நடைபெற்ற 22திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூவரிடமும் இருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள்ள 144 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிபொருட்கள் மீட்கப்பட்டு குற்றவாளிகள் 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய சிக்கலான திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டு தெரிவித்தார்.













