1993ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அடுத்த ஓராண்டில், அதாவது
கடந்த 1994ல் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் வசித்தவர்களுக்கு தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது.
சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் உத்தரவு அடிப்படையில் 1998ல் நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து 1998 நவம்பரில் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் ஆலை இயங்க அனுமதித்தது.
2010 செப்டம்பரில் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி ஆலையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அடுத்த மூன்று நாட்களில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2013 மார்ச்சில் விஷ வாயு கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. ஆலை ஏற்படுத்திய மாசுக்கு இழப்பீடாக 100 கோடி ரூபாய் வழங்க 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் தீவிரப்பட்டது. 2018 மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். 2018 மே 28 ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.
அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வால் அறிக்கை அளித்தார். உடனே, ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
2019 பிப்ரவரி 27ல் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019 ஜூனில் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. 39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8ல் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.ஸ்டெர்லைட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு வாரமாவது தற்ப்போதைய நிலையே நீடிக்கவேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிர்வாக கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
815 பக்கங்கள் கொண்டதாக தீர்ப்பு இருந்தது.















