ராஜீவ்குமாரின் கண்ணாமூச்சி விளையாட்டு : திணறும் சிபிஐ

0
1119

மே.வங்க அரசை ஆட்டுவது சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு. அமைச்சர், எம்பிக்களை வளைத்த அந்த வழக்கின் ஆக்டோபஸ் கரம் மம்தாவை நெருக்க சமயம் பார்க்கிறது.
அவருக்கு மிகவும் அணுக்கமாக இருந்த சிஐடி  கூடுதல் இயக்குநர் ராஜீவ்குமாரை கைதுசெய்ய சிபிஐ அணுக, அவரது வீட்டுக்கே சென்று மறியல் நடத்த மம்தா முயன்றது வழக்கில் ராஜீவ் குமாரின் பாத்திரத்தை விளக்கும் சம்பவமாகும்.
இதனால், அரக்கனின் உயிர்நிலை தேடி அலையும் சாகச இளவரசன் போல சிபிஐ ராஜீவ்குமாருக்கு தொடர்ந்து வலை விரித்தது. முதலில் அபயம் அளித்த அலிப்பூர் மாவட்ட நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டதையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவர் விடுமுறையில் இருப்பதாக  வக்கீல் வக்காலத்து வாங்க, விடா முறையில் வீடு, வீடாக சிபிஐ காவலர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடந்த 12 நாட்களாக ராஜீவ் குமாரை சிபிஐ தேட, அவர் எங்கோ ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சு காட்டுகிறார். உறவினர் வீடுகள் எல்லாம் தேடியாயிற்று. காணவில்லை.

ராஜீவ்குமார் மீது காவல்துறையின் கடைநிலை காவலர் முதல் அனைவரும் அபிமானம் கொண்டவர்கள் என்பதால் சம்பந்தமே இல்லாத காவலர் கூட தன் வீட்டில் மறைத்துவைத்திருக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ கருதுகிறது.

இரணியனின் ரத்த துளிகள் அத்தனையும் மூட்டை பூச்சிகளாக, அவற்றை ஒவ்வொன்றாக நசுக்க கிருஷ்ணன் தவித்ததுபோல், ஆயிரக்கணக்கான காவலர்களில் யார் வீட்டில் தேடுவது என சிபிஐ குழம்பித் தவிக்கிறது.
எதுவாயினும், இது சிபிஐ காலம் சிதம்பர ரகசியம் அறிந்த அவர்களால் ராஜீவின் அஞ்ஞாத வாசத்தை அறிவது அவ்வளவு கடினமல்ல என்பதால் மே. வங்க திரிணாமுல் கட்சியே திகைத்துக்கிடக்கிறது.

கள்ளன் _ போலீஸ் விளையாட்டை விட, இந்த போலீஸ் _ போலீஸ் விளையாட்டு விறுவிறுப்பாகவே இருப்பதாக பலரும் ரசிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here