மதுரை மாவட்டம் பேலஸ் சாலையில் உள்ள மதுரை மாவட்ட பதிவாளர் (தெற்கு) அலுவலகத்தில் (மஹால்) உள்ள 1 ஆம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். பதிவாளர் சதாசிவம், டிஐஜி சுவாமி நாதன் உள்ளிட்டோரிடமும், பணிசெய்ய வந்த பொதுமக்களிடமும் பதிவுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, ‘பத்திரப்பதிவு அலுவலங்களில் சமூக இடைவெளியோடு இரண்டு தினங்களாக பத்திரப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களைப் போல் இல்லாமல் , எளிமையான முறையில் இடைத்தரகர்கள் இல்லாமல் உரிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு உரிய நேரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பத்திர அலுவலகங்களுக்கு உத்தரவு அனுப்பி இருந்தோம்.
முதற்கட்டமாக மஹால் அலுவலத்தில் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்த போது, சரியாக பத்து மணியளவிலேயே பத்திரப்பதிவு அலுவலர் வந்திருந்தார். கடந்த காலங்களில் 10 மணி என்றால் 11 மணிக்குத்தான் மணிக்குத்தான் வருவார்கள். இன்று வரிசைப்படி பதிவு செய்து 25 நபர்களுக்கு முறைப்படி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
சரியாக செயல்படாமல் முறைகேடு யார் செய்தாலும் அவர்கள் மீது துறை ரீதியாக வாயிலாக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.