ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பாகிஸ்தான் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்திருந்த இம்ரான் கான் இந்தியா எல்லைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று என்று அறிவுறுத்தியுள்ளார். அது மிகவும் நல்ல அறிவுரை தான். ஏனென்றால், அந்தத் தவறை அவர்கள் மீண்டும் செய்து இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லமாட்டார்கள்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம்.
பாகிஸ்தான் தொடர்ந்து பலூச்சி மக்களுக்கு எதிராகவும், பஸ்தூன் மக்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் செய்து வந்தால் வரும் காலங்களில் இன்னும் துண்டு துண்டாகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.