மாநில சுயாட்சி பற்றி வாய் கிழியப்பேசிய தமிழகம், மருத்துவ வல்லுநர்கள் கருத்து கூறிய பின்னும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்புக்கு பிரதமரின் அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறது. அது அவர்கள் நிலை. ஆனால், மக்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.
இனி ஒரு நாள் ஊரடங்கை நீட்டித்தால் கூட மிக முக்கிய உணவு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய சூழலில் மாநிலம் உள்ளது. வீதியோர மக்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ள பெரும்பாலான மக்களும் உணவுக்கு வழியற்று உள்ளனர்.
சரக்கு விநியோகத்தை சீராக்கி, விலைவாசியையே கட்டுப்படுத்த முடியாத நிலையில், குறைந்துபோன மக்களின் வாங்கும் திறனை தமிழ்நாட்டு அரசால் நிச்சயம் மேம்படுத்த முடியாது. எனவே, மூவேளை உணவுக்கு கேரளா போல் பொது சமையல் கூடங்களை தொடங்கியே தீரவேண்டும்.
தற்போது பல்வேறு அமைப்பினர் மக்களுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றனர். நோய் தொற்று வாய்ப்பு காரணமாக ஊரடங்ககை மீறி யாரும் உணவுப் பொருட்களை மக்களுக்கு நேரடியாக விநியோகிக்க வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இது ஓரளவு சரியானது தான். கிராம, வட்ட, மாவட்ட மட்டத்தில் உள்ள வருவாய் அலுவலர்களை தலைமையாக கொண்ட, பிற துறை ஊழியர்கள், இதுவரை தொண்டாற்றிய தன்னார்வலர்களை கொண்ட உணவு மற்றும் அடிப்படை தேவைக்கான குழுக்கள் அமைக்கப்படவேண்டும்.
பொதுவெளியிலிருந்து நிதி திரட்டுவதில் மும்முரம் காட்டவேண்டும். துறைசார் அமைச்சர்கள் நினைத்தால் தங்களால் வளர்ந்த தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடம் பணம் பெறுவது எளிது. அதை அவர்கள் கணக்கில் வைத்துக்கொள்ளாமல் அரசு கணக்கில் சேர்க்க வேண்டும், அவ்வளவுதான்.
அதைவிட முக்கியம், மத்திய அரசிடமிருந்து நமக்கு உரிய வரிப் பங்கை இந்த நேரத்திலா வலியுறுத்தி பெறவேண்டும். உரிய நிவாரண தொகையையும் பெறவேண்டும். கையாலாகாத தந்தையால் பிள்ளைகளை காப்பாற்ற முடியாது.
ஊரடங்கை ஊடுருவ முனைவது கொரோனா வைரஸ் மட்டுமல்ல, பசி என்னும் வைரசும்தான். இந்தியாவில் ஊரடங்கால் 4 கோடி குழந்தைகள் பசியிலேயே தூங்குகின்றன என்று புதிய கணக்கெடுப்பு கூறுகிறது. முதியோர் தொகை இதையடுத்து இருக்கலாம்.
உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு காரணமாக உணவு கொடுக்க இயலாததால் 5 குழந்தைகளை கங்கை நதியில் வீசியுள்ளாள் ஒரு தாய். அதுபோன்ற நிலை இங்கு வரக்கூடாது.
மேலும், பொது மருத்துவத்தில் இருந்து அரசு கவனத்தை மிகவும் விலக்கியுள்ளது. அதிலும் கவனம் செலுத்தவேண்டும்.
பீகாரில் உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்த பெண், அங்கெல்லாம் அனுமதியின்றி அலைக்கழிக்கப்பட்ட நிலையில், அந்த தாயின் தோளிலேயே குழந்தை இறந்து போனது. அந்த நிலையும் இங்கு வேண்டாம்.