பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்தியன் வங்கியின் இயக்குனர்கள் குழு அலகாபாத் வங்கி உடனான இணைப்பு குறித்து பரிசீலனை செய்ய நேற்று (புதன்கிழமை) டெல்லியில் கூடியது. அதில் இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அத்துடன் மத்திய அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கி ரூ.5,000 கோடி பெறவும் அனுமதி அளிக்கப்பட்டது.
“இந்த இணைப்பு நாடு தழுவிய அளவில் செயல்படும் வலுவான நிறுவனம் ஒன்றை உருவாக்கும். இணைப்புத் திட்டத்தில் பிரதான வங்கியாக உள்ள இந்தியன் வங்கி தென் மாநிலங்களில் வலுவாக காலூன்றி இருக்கிறது. அதே சமயம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அலகாபாத் வங்கி நன்கு வேரூன்றி உள்ளது” என இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு தெரிவித்தார்.
“2019 மார்ச் இறுதியில் இருந்த நிதி நிலவரங்களின்படி இந்தியன் வங்கி-அலகாபாத் வங்கி இணைப்புக்குப் பிறகு உருவாகும் புதிய வங்கி நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக இருக்கும். 2020 மார்ச் 31-ந் தேதி இணைப்பு நடவடிக்கை நிறைவடையும். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பெரிய வங்கியாக உருவெடுக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.