பிரிட்டிஷ் விவசாயிகள் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கறவை மாடுகள் வைத்திருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொல்பொருள் ஆய்வின்மூலம் கிடைத்துள்ள 6,000 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் விவசாயிகளின் பற்களில், உலகில் வேறெங்கும் கண்டறியப்படாத சான்றுகளுடன், பால் நுகர்வுக்கான ஆரம்ப காலகட்ட நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதை அறிவியல்பூர்வமாக அவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் யார்க் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, இங்கிலாந்தில் கற்காலத்தில் வாழ்ந்த நபர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது. இதில் ஏழு கற்கால நபர்களின் கனிமப்படுத்தப்பட்ட பல் தகட்டில் அடங்கியுள்ள பீட்டா லாக்டோகுளோபூலின் என்ற பால் புரதத்தை அடையாளம் கண்டது.
பிரிட்டனில் கற்காலம் கிமு 4,000 முதல் 2,400 வரை விவசாயம் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டானிய கற்கால மனிதர்கள், அந்த பழங்கால விவசாயத்திலேயே கோதுமை மற்றும் பார்லி போன்றவை பயிரிட்டதுடன் அக்கால கட்டத்தில் பசுக்கள், செம்மறி ஆடுகள், பன்றி மற்றும் ஆடுகள் போன்றவற்றை வளர்த்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றிய ஆய்வுகளைப் பொருத்திப் பார்க்கும்போது இவர்கள் கறவை மாடுகள் வைத்திருந்ததற்கான அடையாளங்களை நாம் உறுதி செய்ய முடிகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.