தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் கடந்த ஒரு வாரமாக மர்மமான பறவை காய்ச்சல் நிலவுகிறது. இதில் நூற்றுக்கணக்கான கோழிகள் இதுவரை மடிந்துள்ளன.
கோழிகள் மட்டுமின்றி வானில் பறந்து செல்லும் காகங்களும் திடீர், திடீரென செத்து விழுகின்றன. பாரிய அளவில் இழப்பு நடந்திருப்பதாலும், வேகமாக பரவுவதாலும்,’பறவை காய்ச்சல்’ என அறிவித்து வட்டாரத்தில் உள்ள கோழிகளை கைப்பற்றி அழிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இல்லையேல், தூத்துக்குடி மற்றும் பக்கத்து மாவட்டமான நெல்லையிலும் இது பரவி பெருமளவு இழப்பை ஏற்படுத்திவிடும். ஆனால், பறவைக் காய்ச்சல் என்று அறிவித்தால் கோழிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பதால் கால்நடைத்துறை அவ்வாறு அறிவிக்க தயங்குவதாக கோழி வளர்க்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு இறந்து போன கோழிகள் கால்நடை துறையால் போபாலுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது எவ்வகை மர்ம காய்ச்சல் என்பது ஆய்வுக்குப் பின்பு தெரியவரும். அதன் வீரியத்தை கணித்து காய்ச்சல் பற்றி அறிவிப்பு வழங்கப்படும் என்று கால்நடைத்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

என்றாலும், பொதுமக்கள் அளவில் அதிக அளவு பீதி ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.









