பணகுடி அருகே சிறுமியை தீ வைத்து கொல்ல முயன்ற கொடூர தந்தை

0
467


கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்த குருநாதன் மனைவி சுஜா (33). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் குருநாதன் உடல் நலமில்லாமல் இறந்தார்.


இதனையடுத்து சுஜா மூன்று குழந்தைகளுடன் பெரியவிளையில் தனியாக வசித்து வந்தார். இதனை தொடர்ந்து சுஜாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஜேசுஅந்தோணிராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்தோணிராஜியின் மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக வசித்து வந்த ஜேசுஅந்தோணிராஜூம் சுஜாவும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.


இதனையடுத்து ஜேசுஅந்தோணிராஜ், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் காவல்கிணறில் குடும்பத்துடன் குடியேறினார். மேலும் அங்குள்ள ஓட்டலில் ஜேசுஅந்தோணிராஜூம், சுஜாவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுஜாவின் கடைசி குழந்தையான மகேஸ்வரி (10) அங்குள்ள பேக்கரி கடையில் பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டு விட்டு, அதற்குரிய பணத்தை கடை உரிமையாளரிடம் கொடுக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.


இதனையறிந்த பேக்கரி கடை உரிமையாளர், ஜேசுஅந்தோணிராஜியிடம் உங்களது குழந்தை பணம் தராமல் சென்றுவிட்டதாக கூறி கண்டித்து வைக்குமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசுஅந்தோணிராஜ் வீட்டிற்கு சென்றபோது அங்கு தனியாக இருந்த மூன்று குழந்தைகளிடமும், பேக்கரி கடையில் பிஸ்கெட் சாப்பிட்டு விட்டு பணம் ெகாடுக்காமல் சென்றது யார் என கூறுமாறு தெரிவித்தார். ஆனால் மூன்று குழந்தைகளும் பதிலளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜேசுஅந்தோணிராஜ் மூன்று குழந்தைகளையும் தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் ஆண் குழந்தையும், அதற்கு அடுத்த பெண் குழந்தையும் கூச்சலிட்டவாறு அங்கிருந்து தப்பி சென்றனர்.


குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இரு குழந்தைகள் மீதும் லேசாக பிடித்த தீயை அணைத்தனர். அப்போது கடையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய சுஜாவும், பொதுமக்களும் வீட்டிற்குள் புகுந்து குழந்தை மகேஸ்வரியின் உடல் மீது பிடித்த தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகேஸ்வரியை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே மூச்சுத்திணறல் காரணமாக அதே மருத்துவமனையில் ஜேசுஅந்தோணிராஜூம் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பணகுடி போலீசில் சுஜா புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் ஜேசுஅந்தோணிராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here