ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த சைமன் செங் கடந்த 8-ந்தேதி ஷென்ஜென் என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற போது காணாமல் போனார்.
அவர் சீனாவின் பிரதான நிலப்பகுதி எல்லையில் சீன போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டு, பொது பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 15 நாள் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இது கவலை அளிப்பதாக இங்கிலாந்து கூறிய நிலையில் சைமன் செங் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவரது சட்ட உரிமைகள் காக்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்தது.
தான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சைமன் செங் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என கூறி உள்ளார்.
தனக்கு தற்போது ஓய்வு தேவைப்படுவதாகவும், நடந்தது என்ன என்பது பற்றி பின்னர் தெரிவிப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருந்தார். பின்னர் அந்தப் பதிவு அகற்றப்பட்டு விட்டது.