90 திருட்டுகளில் தொடர்புடைய திருடர் குலத் திலகம் கோவில்பட்டியில் கைது: ரூ.22லட்சம் நகை, பணம் பறிமுதல்

0
663

கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை காவல் நிலைய பகுதியில் 6 வீடுகளில் தங்க நகை பணம், வழிப்பறி மற்றும் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் சபாபதி, பத்மாவதி, உதவி ஆய்வாளர் மாதவராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் வாகன திருட்டு மற்றும் வீடுகளில் நடந்த திருட்டு தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை வைத்து மற்ற மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் கைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

இதில், தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் (38) என்பவர் வீடுகளில் புகுந்து நகை திருட்டு மற்றும் வழிப்பறி, இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை தனிப்படையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் தேடப்பட்டு வந்த ரவி சிக்கினார் . இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருடிய நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பதுக்கி இருந்த இடத்தை அறிந்து அவற்றை மீட்டனர். இதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. 

கைதான ரவி என்ற கார்த்திக் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 4 வீடுகளில் புகுந்து தங்க நகைகள் மற்றும் பணம் திருடியது, வழிப்பறி செய்த வழக்கு மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடியது என 7 வழக்குகளிலும், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் திருடிய வழக்கிலும், நாலாட்டின்புதூர் காவல் நிலைய பகுதியில் வீடு புகுந்து நகை திருடியது மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு என 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் வீடு புகுந்து திருடிய வழக்கு உள்ளது என்பதும், 90 திருட்டு வழக்குகளில்

சம்பந்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை மேற்கு காவல் நிலையத்துக்கு வந்த எஸ்.பி. ஜெயக்குமார், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பார்வையிட்டார். மேலும், இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here