கோவில்பட்டி பெயிண்டரை கொன்றவன் 17வயது சிறுவன்: பெண் தொடர்பில் போட்டி

0
658

கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த பொய்யாமொழி மகன் மதன்குமார் (22). பெயின்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 29-ம் தேதி மந்தித்தோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. உதயசூரியன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் சபாபதி, பத்மாவதி, உதவி ஆய்வாளர்கள் குருசந்திர வடிவேல், துரைச்சாமி மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில், மதன்குமாரை கொலை செய்தது, அவருடன் பெயின்டராக வரும் கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று மாலை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு வந்த எஸ்.பி.ஜெயக்குமார், கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை பாராட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கொலையான மதன்குமாரும், 17 வயது சிறுவனும் பெயின்டராக வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் ஒரு பெண்ணிடம் பழகுவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இதில், கடந்த 29-ம் தேதி சிறுவன் திட்டமிட்டுள்ளார். பின்னர் பாண்டவர்மங்கலம் குளக்கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார், என்றார் .

கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், மதன்குமார் கொலை, குறித்து அவரது தந்தையுடன் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது மதன்குமார் தந்தை மயங்கி விழுந்த போது, சிறுவனும் கதறி அழுதுள்ளார். பின்னர் காவல் ஆய்வாளர் சபாபதி மற்றும் போலீஸார் மதன்குமாரின் தாயாரிடம் விசாரித்த போது, அவர் 29-ம் தேதி இரவு செல்போனில் நான் அழைத்த போது எனது மகன் எடுக்கவில்லையென கூறியுள்ளார். அப்போது அவருடன் இருந்த சிறுவனும் அதே கூறியுள்ளார்.

அதன் பின்னர், போலீஸார் மதன்குமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆராய்ந்த போது, 29-ம் தேதி இரவு அவருடன் சிறுவன் 4 முறைக்கு மேல் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் கேட்ட போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இந்த சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், மதன்குமாரை கொலை செய்தது ஒப்புக்கொண்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here