பொதுவாக கோரிக்கையை வலியுறுத்தி சட்டையை மட்டும் கழற்றிவிட்டு மனு அளிக்கும் அரை நிர்வாண போராட்டத்தை சிலர் நடத்துவதுண்டு, அதற்கே ஆபாச தடுப்பு சட்டப்படி வழக்குப் பதிவு செய்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிகாரியே அரை நிர்வாணமாக மனு வாங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ராதாபுரத்தில் உள்ள பூங்காவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிக்கும் வகையில் அம்மா என்றிருந்த பெயர் அழிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 9ஆம் தேதி பகல் 11 மணியளவில் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, மாவட்ட எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் சாமுவேல், துரைசாமி, பாஜக விவசாய அணி தலைவர் ஆத்திராஜா, பாமக இளைஞரணி செயலாளர் சித்திரைலிங்கம் ஆகியோர் ராதாபுரம் ஒன்றிய ஆணையர் கோபாககிருஷ்ணனிடம் மனு அளிக்கச்சென்றனர். அங்கு ஆணையாளர் அமர்ந்திருந்த கோலத்தை கண்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சட்டையை கழற்றிப்போட்டுவிட்டு ஹாயாக அமர்ந்திருந்தவர், எரிச்சலுடன் இடக்கையால் மனுவை வாங்கி, அரைகுறையாக படித்து விட்டு, அலட்சியமாகவும் அசிங்கமாகவும் பேசியதாக ஒன்றிய அதிமுக செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிறைய பெண்கள் பணிபுரியும் அலுவலகத்தில், அவர்கள் வந்து போகும் இடத்தில் இப்படி ஓர் அதிகாரி அமர்ந்திருந்தது கவுன்சிலராக எல்லாம் பதவி வகித்திருந்த என் போன்றோருக்கு வேதனையாக இருந்தது என்றார் சுரேஷ்குமார்.