இந்தியா போன்று பல மொழி, கலாச்சாரம், சமயம், சமூக, பொருளாதார கட்டமைப்பு கொண்ட ஒன்றியத்தில் ஒரே வித சட்டங்களும் திட்டங்களும் போதிய பலன் அளிக்காததுடன் மக்களுக்கு அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும்.
ஏற்கனவே நேரடி வரி விதிப்பு அதிகாரத்தை இழந்து நிற்கும் மாநிலங்கள், மறைமுக வரி விதிப்பு உரிமையையும் இழந்து நிற்கின்றன. அரசுகளின் அதிகாரத்தில் முதன்மையானது வரி விதிக்கும் உரிமை. அதை இறை என்பர். இறை அல்லது திரை கொள்ளும் அதிகாரமே இறையாண்மையின் முதன்மையான அம்சம்.
சாதி, மத ரீதியான உரிமை பாதிக்கப்பட்டால் போராடும் மக்கள், மொழி, இன ரீதியான, மாநில ரீதியான உரிமை பறி போகும்போது அவ்வளவாக கண்டுகொள்ளாததாலேயே இந்நிலை உள்ளது. மாநில அரசுகள் சுய நல அரசியல்வாதிகளாலேயே ஆளப்படுவதால், இதை எதிர்த்தால் ஆட்சி ஸ்திரத்தன்மை குலையும். வீணாக ஒன்றிய அரசுடன் பகை ஏற்படும். தமது அரசியல் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால் தீவிரமாக எதிர்ப்பதில்லை. அவ்வப்போது சொரிந்து விடுவதைப்போல, உரிமை பற்றி மேடையிலோ, கூட்டத்திலோ முழங்கிவிட்டு நிறுத்திக்கொள்கிறார்கள்.
ஜிஎஸ்டியை தீவிரமாக ஜெயலலிதா மட்டும் எதிர்த்தார். ஜிஎஸ்டியை மட்டுமல்ல, மின் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட திருத்தங்களையும் எதிர்த்தார். அதில் ஓரளவு திடமாக இருந்தார். அட்க்ஹன் பின்பு வந்த அரசு கொள்கை, கோட்பாடு இல்லாததாலும், கோழைத்தனத்தாலும் ஜெயலலிதா எதிர்த்த சட்ட, திட்டங்களையே ஆதரித்து அவருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்தது.
தற்போது ஏற்பட்டுள்ள திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில், ஜிஎஸ்டி, நீட், இந்தி ஆதிக்கம், புதிய கல்விக்கொள்கையை ஏற்பதில்லை என்று நீட்டி முழங்கினாலும், ஆட்சிக்கு வந்த பின்பு அடக்கி வாசிக்கிறார்கள், நீட்டை முற்றிலும் ஒழிப்போம் என்றவர்கள், மத்திய மருத்துவக்கல்வியில் வேண்டுமானாலும் வரட்டும் என்கிறார்கள். இதன்மூலம் மத்திய அரசு மருத்துவ இடங்களை ஏழை, பிற்படுத்த, தாழ்த்தப்பட்ட மக்கள் மறந்து விடுங்கள் என மறைமுகமாக கூறுகின்றனர்.

அதேபோல், ஜிஎஸ்டியை பற்றி முதல் கூட்டத்திலேயே . தமிழ்நாட்டு நிதியமைச்சர் .அதை விமர்சித்து கைத்தட்டலை பெற்றுள்ளார் . ’சிக்சர் அடித்தார்’, ’பிளந்து கட்டினார்’ என்றெல்லாம் ஏடுகள் புகழ்ந்தெழுதுகின்றன. கூட்டத்தில் அவரது பேச்சின் தொடுப்பு, எடுப்பு எல்லாம் துடிப்பாகவே இருக்கிறது. முடிப்பு தான் கொதிப்பாக இருக்கிறது.
’ தற்போதுள்ள இறங்குநிலை சூழலை நாம் தடுத்து நிறுத்தி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.ஒன்றிய அரசு – மாநிலத்திற்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜிஎஸ்டி மன்றம் ஒரு வெற்றிடத்தை தகுதியற்ற முறையில் நிரப்பியுள்ளது. இதற்கு மாறாக இந்த வெற்றிடத்தை, ஏனைய, சிறந்த தகவல் தொடர்பு வழிகள் மற்றும் அமைப்புகளாலும் நிரப்பப்பட வேண்டும்” என்று தொடங்கி,
’ மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு. ஒன்றிய அரசு எப்படி ஒரு ஒருங்கிணைந்த அரசாக இருக்கிறதோ (ஒரு தேசத்தை ஒன்றிணைப்பதில்), அதே போல் ஒரு வழித்தோன்றலாகவும் இருக்கிறது குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட, ஒவ்வொருவரும் ஒரு மாநிலத்திலிருந்து வந்தவர்களே. ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் உட்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாநிலத்தின் வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர்.

ஒன்றிய ஆட்சிப்பணி என்று ஒன்றும் இல்லை. இந்த அறையில் உள்ள ஒவ்வொரு இந்திய ஆட்சிப்பணியாளர்களும் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து வந்துள்ளனர். மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் “நன்கொடையாளராக” ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது. இவ்வாறு செய்வது, அதன் அடித்தளமாக உள்ள மாநிலங்களுக்கு எதிராக செயல்படுவது போல் ஆகும். (அதாவது, நீங்கள் பிச்சையிடத் தேவையில்லை, உங்களுக்கு எங்கள் பணத்தை பங்கிடும் உரிமையில்லை என்பதை மறைமுகமாக சொல்கிறார்). என்று அருமையாக போகிறது அவரின் பேச்சு.
மத்திய அரசின் நிதி நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளையும் நன்றாகவே விளக்குகிறார்.
’15ஆவது நிதிக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, வரியின் மிதப்பு நிலையில் ஏற்படும் பலன்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களுக்கு ஊக்கமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் ஆகிய அனைத்தும் நடைபெறவில்லை.தொழில்நுட்ப தலங்களுக்கு மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளுக்கு சமமற்ற அணுகல் காரணமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

மறுபுறம், சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பில், நிதி ஆதாரங்களின் இழப்பு மற்றும் மாநிலங்களுக்கான தனிப்பட்ட நெகிழ்வுத்தன்மை ஆகிய முக்கியமான அபாயங்கள், தொடக்கத்திலேயே தெளிவாகத் தெரிய வந்தது. இத்தகைய கடுமையான கவலைகள் இருந்தபோதிலும், பல மாநிலங்கள் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தினர்.
பிரதமர் , குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலம் இருந்த பொழுது, மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக்காகவும் உறுதியாகப் போராடியது போல், பாரதப் பிரதமராகவும் அவ்வாறே தொடர்ந்து செயல்படுவார் என்பது தான் அந்த நம்பிக்கையின் முதன்மையான காரணம்’ என்று நம்பிக்கெட்ட கதையை தொடர்கிறார்.
ஒருவழியாக உரிமை பிரச்சினையை கீழ்க்காணுமாறு தொடுகிறார். ’மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்’
போராடும் நிலைக்கு தள்ளப்பட்டால் போராடவேண்டுமல்லவா? ஆனால், தம் மன வேதனையை புலப்படுத்தும் புலம்பலாகவே அவரது குரல் தேய்ந்து போகிறது.

’ தற்போதைய செயல்முறை பலவீனமாக உள்ளது. மேலும், 10 நபர்களைக் கொண்ட இந்த குழு அதிகபட்சம், மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் கூடுகிறது. “மன்றத்தின் ஒப்புதல்” என்ற இறுதி இலக்கை நோக்கி இன்னும் தொடர்ச்சியான, செயல்திறன் கொண்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வழிமுறைகளை கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு இயங்க வேண்டும். அலுவல் ரீதியிலான குழுக்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டும்’ என்கிறார்.
அதாவது, மாநில அரசின் வரி வசூலிக்கும் உரிமையை திருப்பப் பெறுவதும், வரி வருவாயை தமது அரசு நிர்வாகத்துக்கு சுதந்திரமாக செலவழிப்பதும் தான் தீர்வு என்பதை அவர் தெளிவாக கூறவில்லை.
’இறுதியாக, தலைவர் அம்மையார் அவர்களே, இந்த முக்கியமான தருணத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை ஆழமாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை நான் தெரிவிக்கின்றேன். இப்போது அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிடில் எதிர்காலத்தில் பெரும் இழப்பை நாம் சந்திக்க நேரிடும்’ என்று ஜக்கமா பக்தன் போல் உடுக்கை அடித்துக்கூறிவிட்டு உட்கார்ந்து விடுகிறார்.
இந்தப்பேச்சு முரசொலிமறன் உலக வர்த்தக மாநாட்டில் பேசியது போலவே புரட்சிகரமாக இருக்கிறது. அதில் பேசிவிட்டு பின்னர் உலக வர்த்தக காட் ஒப்பந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் திமுகவும் ஒத்து ஊதியது வரலாறு.

ஜிஎஸ்டி, நீட் போன்றவை மாநிலங்களின் அடிப்படை உரிமைக்கும் நியாயத்துக்கும் எதிரானவை. வரி கொடுத்துவிட்டு வறுமையை சுவீகரித்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும்.
மத்திய அரசின் அளவு கடந்த அதிகாரத்தின் அடையாளமாக ஜிஎஸ்டி விதிப்பு அதிகாரம் இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும் மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளது.சில நாடுகளில் மாவட்டங்களுக்கும் மாநகரங்களுக்கும் கூட வரி விதிக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
நமது மன்னராட்சி காலத்தில் உள்லாட்சி அமைப்பு வரி திரட்டும் உரிமை பெற்றிருந்ததை அறிவீர்கள். மன்னராட்சி காலத்தில் அவ்வாறு மக்களாட்சி தத்துவம் கடைப்பிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய தமிழ்நாடு அரசு, இப்போது வரி தண்டும் உரிமையை இழந்து வறட்டு தத்துவம் பேசி நிற்பதால் வரட்டி தட்டக்கூட வக்கற்றதாகவே பொருளாதார வல்லுநர்களால் அவமதிக்கப்படுகிறது.