இல்ல இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பானை குறிப்பிட்ட பிராண்ட் திர்வம் பீய்ச்சி ஸ்வாகா செய்துவிடும் இல்லத்தரசி ஒருவரால், தனது பிள்ளைக்கு படிப்பிக்கும் ஆசிரியரின் உள்ள இடுக்கில் ஒளிந்திருக்கும் வக்கிரத்தை கண்டறிந்து ஒழிக்க முடியாது.
நமது கல்வி அமைப்பு ஆசிரியர் ஸ்தானத்தை அந்தளவு உயர்த்தியிருக்கிறது. ஆனால், அவருக்கான தரத்தை அடிமட்ட அளவு தாழ்த்தியிருக்கிறது. அரசுப்பள்ளிக்காவது சில தகுதி தேர்வுகளை எழுதித்தான் ஆசிரியராக முடியும் (அந்த தகுதி தேர்வு தகுந்த தேர்வா என்பது வேறு விடயம்). தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் உற்றார், உறவினர், அண்டையர்,அடிமைகளையே ஆசிரியர்களாக நியமிப்பதால் அவர்கள் நிர்வாகத்துக்கு விசுவாசம் காட்டிக்கொண்டே, பிள்ளைகளிடம் விகாரத்தை காட்டுகின்றனர்.
பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்திலும் இதுதான் நடந்தது. ஐந்தாண்டுகளாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அதை நிர்வாகம் சீரியசாக எடுத்துக்கொள்ளாததன் காரணம் இதுதான்.
இத்தகைய பள்ளிகளில் சேரும் பிள்ளைகளின் பெற்றோரின் தரத்தையும் பேசுபொருளாக்க வேண்டும். பெரும்பாலும் உயர்நடுத்தர, உயர்தர வர்க்கத்தினரே இங்கு பிள்ளைகளை சேர்க்க நெருக்கியடிக்கின்றனர். அவர்களின் மனோபாவம் பெரும்பாலும் ஊருக்கு ஒத்துப்போதல், முடிந்தால் கூடுதலாக குனிந்து நிற்பது என்பதாகவே இருக்கிறது.காரணம், தம் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற்று போட்டித்தேர்வுகளை கடந்து அதிகார பதவிகளில் அமரவேண்டும் என்பதே அவர்களின் அவாவாக இருக்கிறது. அதனால்தான் குழந்தைகளின் ஐந்தாண்டு குற்றச்சாட்டை அக்கறையாக எடுத்து, நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுக்க முயலவில்லை.
மொத்தத்தில், பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் பள்ளிகளுக்கும், பதவி ஒன்றே இலட்சியமாக இருக்கும் பெற்றோருக்குமிடையே வக்கிர ஆசிரியர்கள் கைகளில் துவண்டு கிடக்கும் பூங்கொடிகளாக பிள்ளைகள் இருக்கிறார்கள்.
வக்கிர ஆசிரியர்கள் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆராய்ந்தால், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பள்ளி நிர்வாகம், முட்டு கொடுக்கும் அரசியல் பெரும்புள்ளிகளின் காட்சி துல்லியமாக தெரியும்.
பால சேஷாத்ரி பள்ளி விவகாரம் பழைய மாணவிகளால் கிளறப்பட்டு கடந்த 21ஆம்தேதியே சமூக வலைத்தளத்தில் வந்தது. கடந்த 23ஆம் தேதி அன்று பள்ளியின் முன்னாள் மாணவிகள் தரப்பில் பள்ளி குழுமத்தின் டீன் ஷீலா ராஜேந்திராவுக்கு புகார் அனுப்பியுள்ளனர். அதை டேக் செய்து பாடகி சின்மயி போன்ற பழைய மாணவிகள் டுவீட் செய்தனர். ஆனாலும், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் ராமதாஸ் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கையிட்ட பின்பே விசாரணை நடந்தது.
இதில், கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், இதில் அறிக்கையிட்ட எவரும் சாதியையோ, பள்ளி நிர்வாகிகள் குடும்பத்தையோ வம்புக்கு இழுக்கவில்லை. விவகாரம் குறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகோஷ் பொய்யாமொழிகூட ’ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் கண்ணியமுடன் உடையணிந்து பாடம் நடத்த வேண்டும். சென்னை தனியார்ப் பள்ளி ஆசிரியர் சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தான் தெரிவித்தார்.
ஆனால், வேறு வழியின்றி, பிரச்சினையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு ஆளான கமல்ஹாசன் போன்றவர்கள் வேண்டுமென்றே அதுவரை தொடங்கப்படாத விவாதத்தை தொடங்கிவைத்தனர்.
விருப்பமான எந்த பிரச்சினைக்கும் விறுவிறுவென்று பேட்டி அளித்துவிடுபவர் கமல்ஹாசன். அப்படித்தான் அண்ணா பல்கலைகக்ழக துணைவேந்தர் சூரப்பா விடயத்தில் சீறினார். ஆனால், பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் சீண்டலை கண்டிக்க முழுதாக மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டார்.
அதன்பின்பும், ’இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல, நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்” என்று நிழற்படக் காட்சிகளுடன் நிஜத்தை பொருத்த முயல்கிறார்.
அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ’இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது’ என்று சம்பந்தமில்லாத ஒன்றை சம்பந்தப்படுத்தி பேசுகிறார்.
சின்மயியும் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை கண்டித்ததோடு, இதுபோல் பல்வேறு பள்ளிகளிலும் நடந்திருக்கின்றன என்று குறிப்பிட்டு பட்டியலிட்டார். அதாவது, எங்கும் நடக்கிறது, இங்கு தான் வேகமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது போன்ற தொனியில் அவரது பதிவு அமைந்தது.
அதுமட்டுமல்ல, விவரம் இல்லாத விடலைப்பருவப் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட தீங்கோடு, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இணைத்து, ‘ பிஎஸ்பிபி பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்த கனிமொழி, வைரமுத்து என்னிடமும் 16 பிற பெண்களிடமும் நடந்துகொண்டது பற்றி விசாரிக்க கோரிக்கை வைக்கவேண்டும் என்று கூறி, பிரச்சினையை வேறு திசைக்கு இழுத்தார். அது வழக்காக இருக்கும் நிலையில், இந்த விவாதம் தேவையா என்று அவர் யோசிக்கவில்லை.
இது மட்டுமல்ல, பள்ளிக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் பலரும் தங்கள் வர்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
24ஆம்தேதியன்றே சில முக்கியஸ்தர்கள் நிர்வாகத்துக்கு ஆதரவான இணையவழிக் கூட்டத்தை கூட்டினர். அதில், பிராமண எதிர்ப்பு நிலைப்பாடுதான் இந்த பிரச்சனை எழுப்பக் காரணம் என்ற வகையில் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சுப்பிரமணியசுவாமி, ’10ஆயிரம் மாணவர்கள் பயிலும் சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை கியானி என்ற சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நிர்வகித்து வருகின்றனர். அப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்பதற்காக திமுக, திகவைச் சேர்ந்தவர்கள் அப்பள்ளியைத் தாக்கி வருகின்றனர்.
இந்த குண்டர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நான் அப்பள்ளிக்கு அரணாக இருப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ’இந்த விவகாரம் தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்டவர்களிடம் தமிழ்நாடு பாஜக என்ன செய்துகொண்டிருக்கிறது’ எனக் கேட்டேன். கட்சி செயலற்ற நிலையில் இருப்பதாக சிலர் தன்னிடம் தெரிவித்தாக அதனையும் மற்றொரு ’ட்வீட்’டில் தெரிவித்துள்ளார்.
ஆக, பாலியல் குற்றச்சாட்டிலிருந்து ஆசிரியரை காப்பாற்றவும், கெட்ட பெயரில் இருந்து பள்ளியை காப்பாற்ரவும் ஒரு கட்சியை பயன்படுத்த, அரசியலை உபயோகப்படுத்த முயற்சி நடந்துள்ளது.
அதற்கேற்ப தாம்பரத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், ‘ பிளஸ் ஒன், பிளஸ் டூவில் படிக்கும் மாணவிகள் விவரம் தெரியாதவர்கள் அல்ல, அடல்ட் ல் கண்டெண்ட் வீடியோ பார்ப்பவர்கள்’ என்று அலட்சியமாக பதிவிட்டுள்ளார். அதாவது, வாத்தியாரின் வக்கிரத்தையல்ல, மாணவிகளின் வயசுக்கோளாறை பிரச்சினைக்கு காரணமாக்குகிறார்.
இயக்குநர் பேரரசு அறிக்கையில், பள்ளியை பற்றிய கண்டனத்துக்கு சில வார்த்தைகளும், வக்காலத்துக்கு பல வார்த்தைகளும் எழுதியுள்ளார்.
’ பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.
உங்களின் அரசியல் பழிவாங்கலுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகததின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.
இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்”. இவ்வாறு தனது அறிக்கையில் பேரரசு தெரிவித்துள்ளார்.
இதில், பிற பல பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களையும் விசாரிக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கூடுமானவரை கல்வி அதிகாரிகள் தாமாக சென்று பள்ளிகள் தோறும் ஆய்வு நடத்தவேண்டும். ஆனால், இந்த காலகட்டத்தில் அதை நிறைவேற்ற முடியாது.
அதேவேளை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள மற்ற பள்ளி விவகாரங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தள வீடியோ ஒன்றில், சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி ஒருவர் சொன்னது வெளியானது.
சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் ஸ்டேர்ட் போர்ட் வர்த்தகம் பிரிவு ஆசிரியர் ஆனந்த் பி.எஸ்.பி.பி ராஜகோபாலனை போன்று நடந்துகொள்வதாக, ஒருவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதைப் பாடகி சின்மையி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அதே பள்ளியில் சிபிஎஸ்சி பாடபிரிவு, உடற்கல்வி ஆசிரியர் பூபாலன் என்பவரும் இதுபோன்று தவறாக நடந்துகொள்வதாகவும் பகிரப்பட்டுள்ளது.
மற்றொரு பெண், தனது தோழி ஒருவருடன் பி.எஸ்.பி.பி பள்ளியின் கராத்தே ஆசிரியர் பாலியல் உறவு கொண்டதாகவும், தன்னிடம் அவர் பலமுறை அத்துமீறி நடந்துக்கொண்டதாவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜகோபாலன் வக்கிர ஆசிரியன் என்றால், ஐந்தாண்டுகளாக தொர்ந்த குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி, அவ்வாறான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியில் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியரையே நியமித்ததோடு, இப்போது குற்றச்சாட்டு இயற்கை விதிப்படி தாமாக வெளிப்பட்டு, காவல் விசாரணை, கைது என்று ஆனபின்பு, மிக, மிக தாமதமாக ஓரு பொத்தாம்பொதுவான அறிக்கையை, உப்பு சப்பில்லாமல் வெளியிட்டிருக்கும் பால சேஷாத்ரி பள்ளி வக்கிர பள்ளியாக தோன்றுகிறது.
’நம் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மீது குறிப்பிடப்படும் புகார் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம் மாணவர்களின் உடல், மன உணர்வுகளைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. இதுபோல் இதற்கு முன் ஒரு குற்றச்சாட்டு பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்ததில்லை. என்றாலும், இந்தப் புகார்களை தாமாக முன்வந்து பள்ளி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்கும்’என்று கூறுகிறது அந்த அறிக்கை.
இனி நீங்கள் விசாரித்தால் என்ன, ஆலோசித்தால் என்ன ஆகப்போகிறது, விடயம் நீதிதேவதையின் கைகளுக்கு போய்விட்டது. நீங்கள் உங்கள் மீதான கொடூரக் குற்றச்சாட்டிலிருந்து மீள்வது பற்றி சிந்தியுங்கள். ஆசிரியரின் வக்கிரச் செயலுக்கு உடந்தையாக இருந்த நீங்களும் இப்போது குற்ரவாளி கூண்டில் நிற்பதால் வாக்குமூலம் கொடுப்பதே உங்களுக்கான ஒரே வாய்ப்பு. 2019ல் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் இறந்த வழக்கில் முதல்வரை கைது செய்ததுபோல், இப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பள்ளி நிர்வாகத்தை முடக்கவேண்டும், கல்வி அனுமதியை தற்காலிக ரத்து செய்யவேண்டும். இங்கு பயிலும் மாணவர்கள் பிற கல்வி நிலையங்களில் சேர அரசு பூரணமாக உதவ வேண்டும் என்பதே கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோடிக்கையாக இருக்கிறது.
ஏனெனில், ’என்னைப்போல் இன்னும் சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்’ என்று ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளார். தொட்டி நீரில் கலந்த நஞ்சை அகற்ற,நீரைக் கொட்ட வேண்டியது நியதி அல்லவா?
அதுமட்டுமல்ல, பிரபல நடிகர் நிதின்சத்யா வெளியிட்டுள்ள டுவீட்டில் , ‘போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த முறை காப்பாற்ற ஜெயலலிதா…மேடம் கூட இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் பள்ளியில் கடந்த காலங்களில் இது போன்ற சிலசம்பவங்கள் நிகழ்ந்திருப்பது உறுதியாகிறது.
ஒரு பத்திரிகை, ‘ பத்மா சேஷாத்ரி பள்ளியின் 60 ஆண்டுகால பாரம்பர்யம் நெடிது. இதுவரை அந்தப் பள்ளி உருவாக்கிய திறனாளர்கள் பல்துறைகளிலும் வெற்றியாளர்களாகப் பயணிப்பதையும் அறிவோம்’ என்றே இந்தப் பள்ளியில் நடந்த பாலியல் குற்றத்தை பற்றிய கட்டுரையை தொடங்குகிறது.
ஒரு பள்ளியின் தரம் என்பது அது கடந்து வந்த காலம், அதில் பயின்று பல பதவிகளை கைப்பற்றிய முன்னாள் மாணவர்களும் அல்ல(ர்). பத்மா சேஷாத்ரி பள்ளியை அப்படியே பார்க்கிறார்கள். அந்தக்காலத்திலேயே அரசு அதிகாரத்துக்கு நெருக்கமாக இருந்து கல்வி நிலையத்துக்கு அனுமதி பெற்ற அவர்கள் சாதுர்யமும், ஏற்கனவே பணத்தால், பதவியால் உயர்ந்த இடத்துப் பிள்ளைகளே படித்ததால் அவர்களின் வேலை வாய்ப்பும் பள்ளியின் தரத்தை அளக்கும் அளவு கோலாகும் தகுதியை இழக்கின்றன.
உண்மையான ஒழுக்கமும், விழுமியமும், பண்பாட்டு பழக்க வழக்கமும் அறிவின் விசாலமும், ஆற்றலின் பெருக்கமும் கொண்ட மாணவச்செல்வங்களை உருவாக்குவதே நல்லப் பள்ளிகளின் தரத்துக்கு எடுகோள்களாக இருக்கவேண்டும். அந்த தார்மீக பலத்தை இழந்துவிட்ட பள்ளிக்கு முட்டுக் கொடுக்கும் சனாதனவாதிகளே பண்பாட்டுப் பாலியல் குற்றவாளிகள்.