மதுரை மாநகராட்சியை பொறுத்த வரைக்கும் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கி வருகின்றன. தற்போது தத்தனேரி மயானத்தில் அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன.
தொடர்ந்து எரியூட்டப்படும் கொரோனா பிரேதங்களால் வெளியேறும் கரும்புகை மற்றும் துகள்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வீடுகள், அங்கு காயப்போடும் ஆடைகள், தண்ணீர் பாத்திரங்களில் விழுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதோ அதற்கான வீடியோ :
இதுகுறித்து மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தாகூர் நகரில் வசித்து வரும் பொதுமக்கள் கூறும்போது, ‘தினமும் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் கொரோனாவால் இறந்த 60க்கும் மேற்பட்டவர்களின் பிரேதங்கள் நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து எரியூட்டப்படுகிற்ன்றன. கடந்த சில தினங்களாக அந்த மின்மயானத்தில் இருந்து வெளியாகும் கரும்புகையோடு, கருந்துகள்கள் கலந்துவந்து சுற்றுவட்டார பகுதியான செல்லூர் தாகூர் நகர், கீழ கைலாசபுரம் பகுதி வீட்டு , மொட்டை மாடிகளிலும், தண்ணீர் பாத்திரங்களிலும், பொதுமக்கள் மீதும் விழுகின்றன .
இது கொரோநாவால் இறந்தவர்களின் மீது சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிபி இ கிட்டுகளின் துகள்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு தோல் அலர்ஜி ஏற்படவும் கொரோனா தொற்று பரவவும் அபாயம் இருப்பதாக அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.