களக்காடு அரசு மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் கொரோனா பரிசோதனை நிறுத்தம்

0
975

நெல்லை மாவட்டம் களக்காடு-நாங்குநேரி ரோட்டில் 2 ஏக்கர் பரப்பளவில் 30 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. 2 மருத்துவர்கள் உள்பட 12 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.

தற்போது 2ஆம் கட்ட கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் களக்காடு பகுதியிலும் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. பகுதி பொதுமக்கள் களக்காடு அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு வந்தனர். வாரம் தோறும் செவ்வாய்கிழமை மட்டும் தடுப்பூசி போடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல கொரோனா பரிசோதனைகளும் நடத்தப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவும், மாநில காங் பொருளாளருமான ரூபிமனோகரன் நேற்று களக்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்த டாக்டர் சினுஷா மற்றும் ஊழியர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும், மருத்துவமனைக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் கொரோனா தடுப்பூசி போடுவது, பரிசோதனைகள் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது பற்றியும் கேட்டறிந்தார்.

அதற்கு பணியாளர்கள் மருந்து சப்ளை இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதாகவும், போதிய பணியாளர்கள் இல்லாததால் பரிசோதனை பணிகளும் தடைபட்டுள்ளதாக தெரிவித்தனர். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ களக்காடு அரசு மருத்துவமனையில் நிலவி வரும் பணியாளர் பற்றாகுறை உள்ளிட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நிறுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் கொரோனா பரிசோனை பணியையும் மீண்டும் தொடங்க அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here