திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘சூம் ஆப்’ மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ‘பிற மாநிலங்களில் தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
‘நோயின் நிலை பற்றி அரசு மறைக்கும் போக்கு ஆபத்தாக உள்ளது. நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கையை மறைப்பதையும் வெளிப்படையாக இல்லாததையும் எளிதாக எண்ணிவிட முடியாது’ என்றவர் தொற்று குறித்த புள்ளி விவரங்களை கூறினார்.
ஏப்ரல் 20ல் கூட கொரோனா பணக்கார வியாதி, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவுகிறது என எவ்வித புரிதலுமின்றி முதல்வர் சொல்லிவந்தார். ஏப்ரல் 24ல் ஊரடங்குக்குள் ஊரடங்கு அறிவித்ததால் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் குவிந்தனர் என தேதி வாரியாக அரசின் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
கொரோனா மரணங்கள் 3 வாரம் கழித்தே வெளியிடப்பட்டன. மரணம் பற்றிய தகவல் இன்றி நோய் தடுப்பு பற்றி எப்படி முக்கிய முடிவுகள் எடுப்பது? முன்களத்தில் இருக்கும் வீரர்களுக்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி 460 என்றபோது, சுகாதார துறை 224 பேர் என்று உயிரிழந்தோர் எண்ணிக்கையை இருவேறு விதமாக கூறியது. 236 பேர் மரணம் மறைக்கப்பட்டுள்ளது. இப்படி இறப்பு குறித்த தகவல்களை மறைப்பதில் உள்நோக்கம் உள்ளது.
திட்டமிடலுக்கு உண்மை தகவல் முக்கியம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் அது அவசியம். அரசின் அலட்சியத்தால் மக்கள் பேராபத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில முக்கிய கேள்விகளை முதலமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். சமூக பரவல் இல்லையென்றால் ஏன் கொரோனா ஏணிப்படி போல் ஏறுகிறது?
சென்னையில் கொரோனாவை குறைக்கும் செயல்திட்டத்தை எப்போது செயல்படுத்துவீர்கள்?
கமிட்டி மேல் கமிட்டி அமைத்துக்கோன்டிருக்கிறீர்கள். அதன் செயல்பாடு எதுவும் வெளியில் இல்லையே ஏன்?
ஆக்கப்பூர்வமாக நிபுணர்களுடனும் எதிர்க்கட்சியினருடனும் கலந்து பேச ஆரம்பம் மூலம் மறுத்துவருவது ஏன்?
மக்களின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பது வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவது எப்போது?
இது மக்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய கேள்விகள்.
அரசு துறைகளுக்கிடையே உள்ள முரண்பாடுகளை களைந்து மக்கள் வாழ்வாதாரத்தை பேணாவிட்டால் திமுக நீதிமன்றம் செல்லும்.
இவவறு அவர் பேசினார்.