தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி ஊருக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தென்திருப்பேரை பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி அருகே உள்ள கோவங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவருக்கு முதலில் கரோனா உறுதி செய்யப்பட்டது. சடலத்துடன் சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது.
தொடர்ந்து அந்த ஆடிட்டருடன் தொடர்பு கொண்டிருந்த குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை பகுதியில் மேலும் சிலர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் அந்தப் பகுதி முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகள் பேரிகார்டு மற்றும் முட்செடிகளின் மூலம் அடைக்கப்பட்டன.மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் கட்டிவரும் புது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். நேற்று அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.