ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டது கிரீன்லாந்து. டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தாலும், தனி பிரதமர், பார்லிமென்ட் என, கிரீன்லாந்து, தன்னாட்சி அதிகாரத்துடன் உள்ளது. வட அமெரிக்க கண்டத்தில், வடக்கு அட்லான்டிக் மற்றும் ஆர்டிக் கடலுக்கு இடையில் அமைந்துள்ள, மிகப்பெரிய அழகிய தீவு இது. பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ள இந்த தீவு, இயற்கை தாதுக்கள் நிரம்பியது. இங்கு, 57 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். மொத்தம், 7.72 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்த தீவை, அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்கலாமா என, தன் ஆலோசகர்களுடன், அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக, செய்திகள் வெளியாகின.
அதிபர் பதவி வகிப்பதற்கு முன் ரியல் எஸ்டேட் தொழில் செய்த டொனல்டு டிரம்ப், கிரீன்லாந்து தீவில் கிடைக்கும் துாய்மையான குடிநீர், மீன்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலாவுக்கான கவர்ச்சி மூலம் வரும் லாபத்தை கணக்கு பார்த்து இந்த முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், கிரீன்லாந்தின் வெளியுறவு அமைச்சகம், தங்கள் தீவில் வர்த்தகம் தொடர்பான பேச்சுக்கு தயாராக இருப்பதாகவும், அதே நேரம், எக்காரணம் கொண்டும் தீவு விற்பனைக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.