இந்தியாவிலேயே மத அரசியல் பெரிதும் எடுபடாத மாநிலம் தமிழ்நாடு. அதனால்தான் பாஜக பக்கத்து மாநிலம் வரை வளர்ந்தும் இங்கு வாடிக்கிடக்கிறது.
ஒரு நாட்டின் ஆட்சியை பிடித்த கட்சி, பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்காதவாறு வளர்ச்சிப்பணிகளிலும், மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபடவேண்டும். ஆனால், பெரும்பான்மை ஆட்சி அமைத்துள்ள பாஜகவினர், மத உணர்வுகளை தூண்டும் வேலையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
வள்ளுவரை பற்றிய அரசியலை முன்பே இந்து மத பற்றாளர்கள் தொடங்கிவிட்டாலும், அண்ணா காலத்தில் அதற்கு தகுந்த பதில் அளிக்கப்பட்டதும் அமைதியாயினர்.
மனித சமுதாயத்தில் செயற்கையாக வகுக்கப்பட்ட, புகுத்தப்பட்ட சாதி, மத பிரிவொன்றில் இயற்கையின் விபத்தாக பிறந்துவிட்ட அறிஞர்களையும், தலைவர்களையும், அதே பிரிவின் ஆளுமைகளாக சுருக்கி ஆதாயம் தேடுவது இழிவான சாதி, மத சதியாளர்களின் இயல்பாக இருக்கிறது.
நிலவுடைமை மேலோங்கிய மன்னராட்சி காலத்தில் பிறந்த வள்ளுவர் அக்கால கட்டமைப்பை மீறி பல்வேறு சீர்திருத்த கருத்துக்களை வெளியிட்டவர். இதனாலேயே அவர் அகில உலக அறிஞராக கருதப்படுகிறார். அவரது திருக்குறள் உலகில் பெரும்பான்மை மொழிகளில் பெயர்க்கப்பட்ட மூன்றாவது முதன்மை நூலாகும்.
அவர் சமணரா, சைவரா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு. இறுதியில் அது மூடத்தனமான வாதம் என கைவிடப்பட்டு பல்லாண்டு கடந்த நிலையில், மீண்டும் ஆளுங்கட்சியான பாஜக, பிரச்சினையை கிளப்பியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். பாஜகவின் ஊடகத்தில் வள்ளுவர் படத்தை தவறாக சித்தரித்திருக்காவிட்டால் இந்த முரண்பாடே எழுந்திருக்காது என்பதாலேயே அவர்களை முதன்மையாக குற்றம்சாட்டவேண்டியுள்ளது.
உலகளவில் வள்ளுவத்தின் மீது மறுசுற்று ஆய்வு நடத்தப்படும் நிலையில் இந்த பிரச்சினையை கிளப்பியிருப்பது அவரது பெருமையை குறைக்கவும், தமிழ் நாட்டில் வேண்டாத கலவரத்தை தூண்டுவதற்கும் அடிப்படையாக அமைந்துவிடும்.
இதற்கிடையே, இதை பின்பற்றி இஸ்லாமிய, கிறிஸ்தவ அன்பர்கள் அவரவர் மதக்குறியை வள்ளுவர் படத்தில் வரைவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். உங்கள் மதக்குறிகளை உங்கள் உடலில் வரைந்துகொள்ளுங்கள். வள்ளுவனை வம்புக்கிழுக்க மதவாதிகளுக்கு தகுதியில்லை. அவன், அவர்களை விட்டு வெகுதூரம் விலகியிருந்ததை அவனது குறளே கூறும்.
சந்தடிச்சாக்கில் சில திராவிடக்குஞ்சுகள் வள்ளுவர் முகத்தில் கருணாநிதியை கிராபிக்ஸ் செய்துள்ளனர். ஏற்கனவே இதுபோல் அவரை வருணித்தபோது, ‘ இந்த வேலை வேண்டாம்’ என்று தொண்டர்களை எச்சரித்துள்ளார். இதே அசிங்கமான வேலையை கையாலாகாத கமல்ஹாசன் ரசிகர்களும் செய்துள்ளனர். ஆளாளுக்கு தத்தம் அடையாளத்தை தமிழ் இனத்தின் பேரறிஞன் மீது எச்சமிடுவதை, உடலில் நல்லுதிரம் ஓடும் தமிழர்களால் சகிக்க முடியாது. இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இன்று தமிழ் இளைஞர்களின் இனமானம், மொழியுணர்வு குன்றியிருக்கலாம். நாளையே அவர்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால், தங்கள் தந்தையர் முகத்தையே சிதைத்ததுபோல் சினம் கொள்வார்கள். அவர்கள் கோபத்தை எதிர்கொள்ள உங்களால் முடியாது. ஒட்டுமொத்த தமிழர்களின் உருவமான வள்ளுவனை இழிவுபடுத்தும் வேலைகளை இத்தோடு விடுங்கள்.