மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு, காலவரையறையுடன் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் சுமார் 18,000 அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் சுகாதார செயலர் பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து தொடர்கிறது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சியில் அறுவை சிகிச்சைக்கு மட்டும் மருத்துவர்கள் சென்றனர். மதுரையில் இப்போது போராட்டம் இல்லை. வரும் 30, 31ஆம் தேதிகளில் போராடப்போவதாக அறிவித்தனர். காஞ்சிபுரத்தில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்குகிறது.
காரைக்குடியில் ஒரு மருத்துவர் மட்டுமே இன்று பணி புரிந்துள்ளார். நெல்லையில் அவசர பிரிவு இயங்குகிறது. உள்நோயாளிகள் ஓரளவு கவனிக்கப்படுகின்றனர். வெளிநோயாளிகளை கவனிக்க ஆளில்லை.
முதுநிலை மருத்துவ மாணவர்களை கொண்டு பணிகளை கவனிப்பதாக சென்னை, திருச்சி மருத்துவக்கல்லூரி டீன்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்கால நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தினாலும், கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.