நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அளித்த மனுவில் குறைபாடு இருந்ததை சுட்டிக்காட்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேட்சை வேட்பாளர் மாரியப்பன் மனு அளித்தார்.
வழக்கமாக எதிர் வேட்பாளர்கள் இது போன்ற ஆட்சேபங்களை நல்ல வாய்ப்பாக பற்றிக்கொண்டு தாங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனோ, அவருடன் வந்த காங்கிரஸ், திமுக பிரமுகர்களோ ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் கூறவில்லை.
இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, நேற்று ரூபி மனோகரன் அளித்த மனு நிறைவற்றதாக இருந்துள்ளது. அவசர, அவசரமாக மாற்றி நிரப்பி அளித்துள்ளனர். அவரது மனுவே முறையாக நிரப்பப்படாததால், அதிமுக மனுவை ஆட்சேபித்தால் தங்கள் குட்டும் வெளிப்பட்டுவிடும் என்று அஞ்சியே பிரச்சினையை டீலில் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையர் கவனம் செலுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் அனைத்து மனுக்களையும் உடனடியாக மறுபரிசீலனை செய்தால் நல்லது.