காங்கிரஸ் என்றாலே கலாட்டாவுக்கு பஞ்சமில்லை. அதுவும் இடைத்தேர்தல் என்றால் கேட்கவா வேண்டும்?
நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு பெறுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. கஷ்டப்பட்டு கிடைத்த தொகுதியை வேட்பாளர் தேர்வில் நடக்கும் வெட்டு குத்தால் கெடுத்து விடுவார்களோ என்று கட்சியினர் கலங்கும் நிலை உருவாகி உள்ளது.
ஏற்கனவே நாங்குநேரி தொகுதியில் வேற்று ஊர்க்காரர்கள் ஆதிக்கம் இருந்ததால் மனம் புழுங்கிக்கிடந்த கதர்சட்டைக்காரர்கள் இம்முறை முன்னதாகவே சுதாரித்துக்கொண்டு உள்ளூர்காரரையே நிறுத்தவேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனாலும் வேட்பாளருக்கான போட்டியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரி அனந்தன், ரூபி மனோகரன் போன்றோர் கையே மேலோங்கி நிற்கிறது. இதில் கடைசியாக ஒரு முறையாவது எம்எல்ஏவாகிவிட வேண்டுமென்று குமரி அனந்தனுக்கு இருக்கும் துடிப்பு அவரது இளவலான வசந்த குமாருக்கு இல்லை. ‘வயதான காலத்தில் இதெல்லாம் எதற்கு?’ என்பது அவர் எண்ணம். ஆகவே திண்ணமாகவே ரூபி மனோகரனுக்கு ஆதரவு நல்க தயாராகி விட்டார். இடையில் இருக்கும் போட்டியாளரான ஊர்வசி அமிர்தராஜும் பசையானவர் என்றாலும் பலருக்கு இசைவானவராக இல்லை.
எனவே, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘பில்டர்’, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரனுக்கு சீட்டு உறுதியாகிறது.
ஆனால் உள்ளூர்க்காரர்கள் கலகம் இத்தோடு நிற்கப் போவதில்லை. அவர்கள் எதிர்ப்புக் கொடி பிடிக்க தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக வேட்பாளர் அறிவிக்கும் முன்பே நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், களக்காடு ஒன்றிய சேர்மனாக இருந்தவருமான தமிழ்ச்செல்வன், தேர்தல் அதிகாரிகளிடமிருந்து வேட்புமனுவை பெற்றுச் சென்று விட்டார்.
‘காங்கிரஸில் காசுள்ளவனுக்குத்தான் சீட்டு. நான் தனித்து நிற்கப் போகிறேன் ‘என்று அறிவித்துவிட்டார்.
ஏற்கனவே நாங்குநேரி தொகுதியில் களக்காடு பகுதியினருக்கு முக்கியத்துவம் இல்லை என்ற பேச்சு கொஞ்ச நாளாக அடிபட்ட நிலையில், தமிழ்ச்செல்வன் களமிறங்கினால் கணிசமான வாக்குகள் பெறுவது உறுதி என்கிறார்கள்.
எப்படியோ, உட்கட்சி சண்டையில் காங்கிரசை அடித்துக் கொள்ள எந்த கட்சியும் இல்லை.