இந்தியாவில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில், கடந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 831 ஆக இருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 953 பேராக உயர்ந்துள்ளது.
இந்திய கோடீசுவரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி என தெரிய வந்துள்ளது.
தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்துஜா குடும்பத்தினர் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி சொத்து மதிப்புடன் 2 வது இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் அசீம் பிரேம்ஜி உள்ளார்.
லட்சுமிமிட்டல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 300 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். கவுதம்அதானி ரூ. 94 ஆயிரத்து 500 கோடியுடன் 5-வது இடத்தில் இருக்கிறார்.
தொழில் அதிபர் உதய் கோடக் ரூ.94 ஆயிரத்து 100 கோடியுடன் 6-வது இடத்திலும், சைரஸ் பூன்வாலா ரூ.88 ஆயிரத்து 800 கோடியுடன் 7-வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்ட்ரி ரூ.76 ஆயிரத்து 800 கோடியுடன் 8-வது இடத்தில் உள்ளனர். சபூர்மிஸ்ட்ரி ரூ. 76 ஆயிரத்து 800 கோடியுடன் 9-வது இடத்திலும், திலீப்சங்கவி ரூ.71 ஆயிரத்து 500 கோடியுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள முதல் 25 பணக்காரர்களின் நிறுவனங்கள் செய்யும் உற்பத்தி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும். இந்திய கோடீசுவரர்களில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8-வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.