ஐநா எத்தனையோ விநோத பேச்சுக்களை ரசித்திருக்கும். அத்தனைக்கும் ஆதிக்க நாடுகளின் கனத்த மௌனமே பதிலாய் நிற்கும்.
நேற்று நடந்த காலநிலை மாற்றம் மற்றும் மரபுசாரா எரிசக்தி கருத்தரங்கில் ஸ்வீடன் நாட்டின் குட்டிப்புயல், 16 வயதேயான கிரேட்டா தன்பெர்க் பேச்சு வசந்தத்தின் இடிமுழக்கம்.
தனது நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பு பள்ளி மாணவர்களை நிறுத்தி சுற்றுச்சூழல் சீர்கேடுகளை முடிவுக்கு கொண்டுவருமாறு போர்க்குரல் எழுப்பிய சிறுமி அவள். அதன் தாக்கம் பெரும்பான்மை நாடுகளின் மாணவர் நெஞ்சங்களில் எதிரொலித்தது. அதுமட்டுமல்ல, பசுமை இல்ல வாயுவை அதிகம் பரப்பும் விமான பயணங்களை குறைக்கும் கோரிக்கையை அகிலத்து ஆட்சியாளர்களின் செவிகளில் அறைந்தார்.
அப்பேர்ப்பட்ட போர்க்குணமுடையவள் நேருக்கு நேர் பன்னாடுகளின் தலைவர்களை பார்த்து கேட்டாள், ‘ என்ன தைரியம் உங்களுக்கு?’ என்று.
‘பேரழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும்போது, உலக தலைவர்களாகிய நீங்கள் பொருளாதார வளர்ச்சியின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். மக்கள் இன்னலுறுகிறார்கள், செத்து மடிகிறார்கள். எங்கள் கனவுகளை திருடியவர்கள் நீங்கள். இளைய தலைமுறையை ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று அரசியல் கறை படிந்த இதயங்களில் ஈட்டியை செருகினார். ஆனாலும், வல்லாதிக்க மனங்களை அவர் தழுதழுத்த குரல் அசைத்திருக்கும் என்று உறுதி கூறமுடியவில்லை.