ஆபத்தான ஊஞ்சல் விளையாட்டு

0
1286

எஸ்டோனிய மக்கள் ஊஞ்சல் விளையாட்டின் மீது அபரிமிதமான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை சிறியதும் பெரியதுமாக ஊஞ்சல் விளையாட்டுகள் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டு வருகின்றன.

1993-ம் ஆண்டு அடோ கோஸ்க் என்பவர் ஒரு ஜோடி ஊஞ்சல்களை உருவாக்கினார். அதுவரை இருந்த ஊஞ்சல்களில் இவை இரண்டும் மிகவும் உயரமானவை. இவற்றில் 360 டிகிரிக்குச் சென்று வரமுடியும். இதை ‘கைகிங்’ என்று அழைத்தனர்.

பார்ப்பதற்கு மிக எளிதான விளையாட்டாகத் தெரிந்தாலும் எளிதானதல்ல. கால்களை ஊஞ்சல் பலகையில் கட்டிக்கொண்டுதான் ஆடுகிறார்கள். மேலே செல்லச் செல்ல கம்பிகளைப் பற்றியிருக்கும் கைகளும் தோள்களும் வலியெடுக்க ஆரம்பித்துவிடும். ஊஞ்சல் செல்லும் போக்கை அறிந்து, உடலை வளைத்து, பிடியை விடாமல் நின்றால்தான் உச்சியில் தலைகீழாக நின்று, மீண்டும் கீழே வர முடியும். இந்த விளையாட்டுக்கு உடல் உறுதி, தைரியம் அதிகம் வேண்டும். மிக ஆபத்தான விளையாட்டும்கூட. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால், உயிர் பிழைப்பதே கடினம். சிறுவயதிலிருந்தே பயிற்சி செய்யும் சாகசக்காரர்களால் மட்டுமே கைகிங்கை விளையாட முடியும். 1997-ம் ஆண்டு அடோ கோஸ்க் தான் உருவாக்கிய கைகிங்கில் பாதுகாப்பு வசதிகளை சேர்த்து ஆபத்தை சற்றுக் குறைத்தார். இன்று அதைவிட உயரமான கைகிங் ஊஞ்சல்கள் வந்துவிட்டன. பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 360 டிகிரிக்குச் சென்று திரும்புபவர்களே போட்டியில் வெற்றி பெற முடியும். பயிற்சி பெற்ற வீரர்களால்தான் எப்படி ஆடினால் உச்சத்தைத் தொட முடியும் என்பதைக் கணிக்க முடியும். தொழில்முறை விளையாட்டு வீரரான ரைலி லான்சலு, “நான் முதலில் 4 மீட்டர் உயரத்துக்குப் பயிற்சி செய்தேன். பிறகு 4.20 மீட்டர், 4.50 மீட்டர் என்று அதிகரித்தேன். ஆனாலும் போட்டியில் 4.20 மீட்டர் வரையே என்னால் செல்ல முடிகிறது” என்கிறார். எஸ்டோனியாவில் தேசிய அளவில் கைகிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here