கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்,
தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முத்து மாவட்டம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு தமிழகத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடைமுறை படுத்த முடியுமா என துறை ரீதியாக பரிசீலித்து வருகிறோம். அடுத்த வாரம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அழைத்து உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தைப் பொறுத்தவரை ஒப்புக்காக ஒரு நபர் ஆணையத்தை நியமிக்கவில்லை. ஆணையம் தனதுஅறிக்கையில் என்னென்ன அம்சங்களை கொசமர்ப்பிக்கிறதோ, அவற்றைை அரசு கவனத்தில் கொள்ளும்
நடிகர் விஜய்யை கேட்டுதான் யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பதில்லை. தம்முடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக சிலர் பரபரப்பாக பேசுகின்றனர். விஜயும் அப்படித்தான் யாருடைய பேச்சைக் கேட்டு பேசினார் என தெரியவில்லை. அவரது பல படங்கள் வெளியாகும் அதற்கு அரசு நல்ல உதவி செய்துள்ளது. மெர்சல் படத்துக்காக எங்களிடம் வந்தார். நாங்கள் முதல்வரிடம் அழைத்துச் சென்று பேச வில்லை என்றால் கடந்த தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியே வந்திருக்காது. இப்படி நாங்கள் வித்தியாசமோ வேறுபாடோ பார்க்கவில்லை.
மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அதை சரியாக வைத்திருக்கிறார்கள். விஜய்யை போன்றவர்களை பேச்சைக் கேட்டு மக்கள் முடிவு செய்ய தேவையில்லை. அந்தளவுக்கு தன்னைத்தானே விஜய் நினைத்துக்கொண்டால் அது அவருடைய அறியாமை என்று தான் சொல்வேன்.
அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் கமலஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார். அவர் தன்னைத்தானே அரைவேக்காடு என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர் எங்களை குறை சொல்லவில்லை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை குறை சொல்கிறார் என்றுதான் அர்த்தம், என்றார் அவர்.