இந்தியா முழுவதும் நீட் தேர்வு மூலம் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் கடந்த மாதம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். இதேபோல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வு மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர்.
அதில் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மாணவர் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் புகார்கள் வந்தன.
இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை அவர் கொடுத்தார். அதன் பின்னர் சென்னை மாணவரின் பெற்றோரை தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு வரவழைத்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு பின்னர் அந்த மாணவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன், க.விலக்கு போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்டு க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் மாணவர் உதித் சூர்யா வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையில், சென்னை வீட்டை பூட்டி விட்டு உதித் சூர்யாவின் தந்தை குடும்பத்துடன் தலைமறைவு ஆகியுள்ளது தெரிய வந்துள்ளது.