‘ஜிகர்தண்டா’ தெலுங்கு ரீமேக்கான ‘வால்மீகி’யில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில், ‘ திரைப்படம் ‘ஜிகர்தண்டா’ படத்தின் காட்சிக்குக் காட்சி ரீமேக் கிடையாது. ‘ஜிகர்தண்டா’வில் பாபி சிம்ஹா உறுதுணைக் கதாபாத்திரம். இதில் வருண் தேஜ் நாயகன். படத்தின் உரிமையை வாங்கி நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம்.
நீங்கள் புதிய படத்தைப் பார்ப்பீர்கள். படத்துக்குள் வரும் படம் தான் இங்கு நாயகன். அதர்வா இயக்குநராக நினைக்கும் இளைஞராக நடித்திருக்கிறார். இது தெலுங்கில் அவர் முதல் படம் என்பதால் எந்த இமேஜையும் கொண்டு வரவில்லை. போராடும் இளைஞனாக அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு நாயகி தான். ஆனால் ‘வால்மீகி’யில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். நான் இயக்கிய ‘துவ்வாடா ஜகந்நாதம்’ படம் ஹிட் ஆக பூஜாவின் கவர்ச்சியும் ஒரு காரணம் என்று பலர் சொன்னார்கள். ஒரு திரைக்கதை ஆசிரியனாக அது எனக்கு வலித்தது.
இந்த முறை அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறேன். மிருணாளினி அதர்வாவின் காதலியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆக்ஷன் மிகக் குறைவு. பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம்’ என்று தெரிவித்துள்ளார்.