நிலங்களில் வாழும் உயிரினத்தில் யானை தான் மிகவும் பெரியது. சமூக வாழ்க்கை முறை கொண்ட யானைகள், அதிக தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும். அதனால் செழிப்பான காடுகளில் தான் யானைகள் வசிக்கும். யானைகள் கூட்டத்திற்கு வழிகாட்டியாக திகழும் தலைவி, அதன் உறுப்பினர்கள் வழிநடத்திச் செல்லும். சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக யானைகள் விளங்குகின்றன. ஏனென்றால் யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும்.
காட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலைக் காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது. காட்டில் பல கி.மீ தூரம் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் உருவாகின்றன. தனது தும்பிக்கை மூலம் பூமியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரைக் கண்டு பிடிப்பதால், மற்ற விலங்குகளும் பயன் பெறுகின்றன.
உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின் படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன. அவற்றில் இந்தியாவில் 32,000 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகளும் உள்ளன. காடுகள் உயிர்ப்போடு இருக்க யானைகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து, அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். வனத்தை பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு வித்திட்டு, பாதைகள் அமைத்து, நீர்நிலைகள் உருவாக காரணமாக இருக்கும் யானைகள் பாதுகாப்போம்