‘டங்க் சிலிப்’பாகி விட்டது – பியூஷ் கோயல்

0
1286

அகில இந்திய அளவிலான வர்த்தக வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மத்திய தொழில் மற்றும் வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு பின்னர் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நாம் தற்போது 6-7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டு வராதீர்கள். ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை. எனவே டிவி சேனல்களில் வரும் தகவல்கள் மூலம் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள்” என்றார்.

பியூஷ் கோயலின் இந்த உதாரணம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், “ஆமாம்… ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணக்கு உதவவில்லை. ஏனெனில் அவருக்கு முன்னரே நியூட்டன் அதை கண்டுபிடித்துவிட்டார்” என கிண்டலடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், “டங்க் சிலிப் (நாக்கு குழறி) காரணமாக ஒரு தவறு செய்ததாகவும், ஐசக் நியூட்டனுக்கு பதிலாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றி குறிப்பிட்டதாக” கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “நாம் அனைவரும் தவறு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறோம். உண்மையில் நான் தவறுதலாக ஐன்ஸ்டீன் பெயரை மேற்கோள் காட்டினேன். ஒருபோதும் தவறு செய்யாத ஒரு நபர், ஒருபோதும் எதையும் புதிதாக முயற்சிப்பதில்லை. தவறு செய்வேன் என்று பயப்படுபவர்களில் நான் இல்லை” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here