கடந்த 2014 மார்ச் 8 ம் தேதி, மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய போயிங் விமானம், 12 விமான ஊழியர்கள், 227 பயணிகள் என, 239 பேருடன் காணாமல் போனது. அந்த விமானத்தின் கதி என்ன என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், கடந்த 2014 மார்ச் 8 ம் தேதி திருவனந்தபுரம் அந்தோணியார் கோவில் அருகில் இருந்த போது, விமானம் ஒன்று கடலில் விழுந்ததைப் பார்த்தாகவும், விமானம் மாயமானது தொடர்பாக அறிவியல் ரீதியான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் என, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜு குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தை எப்படி சென்னை உயர்நீநிமன்றத்தில் வழக்காக தொடர முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மலேசிய நாட்டின் தூதரகம் சென்னையில் இருப்பதால், இங்கு வழக்கு தொடர்ந்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.