மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மும்பை மாநகரம் தண்ணீரில் மிதந்து வருகிறது.
மும்பையில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் வடிந்து விட்ட நிலையிலும் வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுபட்டு உள்ளதை கருத்தில் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடர் நிவாரணப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் 118 விமானங்கள் இன்று தாமதமாக சென்றன, மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக 20 விமானங்கள் வெளியேற்றப்பட்டன, அதே நேரத்தில் 300 விமானங்கள் தாமதமாக வந்தன.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் இடைவிடாத மழை காரணமாக, ரயில் மற்றும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.