கர்நாடகாவில் போராட்டம்: பஸ்கள் எரிப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
1031

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ராமநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் அந்த மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. அரசு–தனியார் பள்ளி–கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மண்டியா, பெங்களூரு, துமகூரு, தட்சிண கன்னட, ராமநகர் ஆகிய மாவட்டங்களில் 15–க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த பஸ்களின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கனகபுராவில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பஸ்சை நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள், பெட்ரோல் ஊற்றி பஸ்களுக்கு தீவைத்தனர்.

இதில் அந்த பஸ்களில் தீப்பற்றி தகதகவென எரிந்து நாசமானது. தீயில் எரிந்ததை அடுத்த அந்த பஸ் எலும்புக்கூடாக காட்சியளித்தது. மேலும் பெங்களூருவிலும் 2 பஸ்களுக்கு தீவைக்கப்பட்டது. இதில் ஒன்று தனியார் பஸ். அந்த பஸ்கள் பாதி அளவுக்கு தீயில் எரிந்து சேதம் அடைந்தது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் பதற்றமும்–பரபரப்பும் நிலவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் கனகபுரா தாலுகாவில் உள்ள சாத்தனூர் பகுதியில் போராட்டக்காரர்கள் 2 பைக்குகளை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவியது.

பெங்களூரு–மைசூரு ரோட்டை மறித்து காங்கிரசார் ராமநகரில் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் டயர்களை போட்டு தீயிரட்டு எரித்து தங்களின் ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர். இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு–மைசூரு தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர். வேறு வழியில் வாகனங்களை போலீசார் திருப்பிவிட்டனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உருவ படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். காங்கிரஸ் நடத்திய போராட்டத்திற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆதரவு வழங்கியது. காங்கிரஸ் கட்சியினர் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்து கோ‌ஷங்களை எழுப்பினர். மத்திய அரசு, அமித்ஷா, முதல்–மந்திரி எடியூரப்பாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நேற்று பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெங்களூருவில் அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையிலும், மைசூருவில் முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here