பொட்டலூரணி ஊராட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்த ராஜினாமா

0
827

தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொட்டலூரணி. நான்கு கிராமங்களைக் கொண்ட இவ்வூராட்சியில், பொட்டலூரணி கிராமம் மட்டுமே ஏறத்தாழ சரிபாதி மக்கள் தொகையைக் கொண்டது. 4 ஊர்களையும் 9 வார்டுகளையும் உடைய எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியில், மற்ற மூன்று ஊர்களிலும் சேர்ந்து ஐந்து வார்டுகள் இருக்கின்றன; பொட்டலூரணியில் மட்டும் நான்கு வார்டுகள் உள்ளன. அப்படி இருந்தும் பொட்டலூரணி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதை மாவட்ட ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டே தவிர்த்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது .


கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரு கூட்டங்கள் மட்டுமே பொட்டலூரணியில் நடத்தப்பட்டன. பல முறை ஊராட்சி மன்றத்தில் கேட்டும் பயனில்லை.  எனவே 2024 ஆகஸ்ட் 15 கிராம சபைக் கூட்டத்தை பொட்டலூரணி கிராமத்தில் நடத்தக் கோரி, 30 நாள்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் அதை நடத்த முன்வரவில்லை. 

எனவே, "மக்கள் கிராமசபைக் கூட்டம்" என்ற பெயரில், பெரும்பான்மையான  ஊராட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் ஒன்று திரண்டு ஆகஸ்ட் 15ல் பொட்டலூரணியில் நடத்தி,  
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்ட ஆட்சியர், ஊராட்சி உதவி இயக்குநர் தொடங்கி அரசு முதன்மைச் செயலாளர் வரை  தொடர்புடைய அலுவலர்கள் அனைவருக்கும் அனுப்பினர். 

அவ்வாறு அனுப்பியும் தீர்மானங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காந்தி பிறந்த நாளான  2024 அக்டோபர் 2இல்  எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றம் நடத்தும் கிராம சபைக் கூட்டத்தையாவது பொட்டலூரணி கிராமத்தில் நடத்தக் கோர எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரியபோது, வழக்கம்போல் அடுத்த முறை நடத்துவோம் என்று கூறியுள்ளார். 

அவர்கள் நடத்தும் கூட்டத்திலாவது பொட்டலூரணி ஊரைச்சுற்றி உள்ள துர்நாற்றம் வீசிச் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்துவரும் மூன்று  கழிவுமீன் நிறுவனங்களையும்  மூடக் கோரி மக்கள் கொண்டுவரும் தீர்மானத்தை பதிவேட்டில் ஏற்றுங்கள் என்று கேட்டபோது மேலதிகாரி பிடிஓ ஒப்புதல் கொடுத்தால்தான் ஏற்ற முடியும் என்று கூறிவிட்டதாக பொட்டலூரணி ஊராட்சி உறுப்பினர்கள் கூறினர்.

எனவே இரண்டாவது முறையாக .காந்தியடிகள் பிறந்த நாளான 02.10.2024இல்  இரண்டாவது  "மக்கள் கிராமசபைக் கூட்டம்"  நடத்தி, கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர், தலைமைச் செயலாளர் அடங்கலாக அனைத்து அதிகாரிகளுக்கும்  அனுப்பினர். அந்தத் தீர்மான வரைவில் 9 ஊராட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஊராட்சியில் 5 ஊராட்சி உறுப்பினர்களும் கிராமசபை உறுப்பினர்களும்  கையெழுத்திட்டனர்.

 அதற்கும் பலன் இல்லாததால், பொட்டலூரணியைச் சேர்ந்த சுபா, ஆதிலட்சுமி, சத்திய நாராயணலட்சுமி, பூமாரியம்மாள்  ஆகிய 4 ஊராட்சி உறுப்பினர்களும் உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்து அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

                


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here