ருமேனியா கோப்பை டி20 தொடரில் துருக்கி அணியை 173 ரன்கள் வித்தியாசத்தில் ருமேனிய அணி தோற்கடித்தது, டி20 கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றியாகும்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிவகுமார் பெரியாழ்வார் என்ற வீரர் ருமேனியாவுக்காக 40 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். ருமேனியா அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தது. ஆனால் இலக்கை விரட்டிய துருக்கி அணி 13 ஓவர்களில் 53 ரன்களுக்குச் சுருண்டு விட ருமேனியா அணி 173 ரன்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி சாதனை புரிந்துள்ளது.
சிவக்குமார் பெரியாழ்வார் மென்பொருள் பொறியாளர் ஆவார், இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர், ருமேனியாவில் 2015ம் ஆண்டு செட்டில் ஆனார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “நான் இந்தியாவில் அண்டர் 15, யு-22, யு-25 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று ஆடியுள்ளேன். நான் என் கல்லூரிப் படிப்படை முடித்த பிறகே 2015-ல் ருமேனியாவுக்குக் குடிபெயர்ந்தேன். ஆனால் கிரிக்கெட் மீது எனக்கு தீராத ஆர்வம் இருந்ததால் ருமேனியாவில் கிரிக்கெட் போட்டிகள் பற்றி விசாரித்து குளூஜ் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தேன்” என்றார்
இதற்கு முன்பாக கென்யா அணியை 172 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிக்கான சாதனையை இலங்கை அணி வைத்திருந்தது.
இந்தப் பட்டியலில் 2ம் இடத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து வருகின்றன. இரு அணிகளும் முறையே அயர்லாந்து மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக மிகப்பெரிய டி20 வெற்றிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.