திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் காங்கிரசார் யாவருமே தர்ம சங்கடத்தில் தான் நெளிகிறார்கள். ஆட்சியின் போக்கில் அதிருப்தி நிலவினாலும், திமுக செய்த உதவியினால் வெளிப்படையாக இடித்துரைக்க முடியாத நிலையில் உள்ளனர்
அதனால் காங்கிரசார் அவ்வப்போது தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆவேசமாக பேசி தங்களை ஆற்றுப் படுத்திக் கொள்கின்றனர் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்க போராட்டங்கள் மூலம் ஆசுவாசப் பட்டுக் கொள்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான்,’ மது ஒழிப்பு மாநாடு’ யோசனை மண்டையை தட்டியது.
மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தும், அட்மின் மூலம் ‘ஆட்சியில் பங்கு’ என்ற காணொளியை ‘ஒன்ஸ்மோர்’ போட்டும் திமுகவுக்கு பீதியை கிளப்ப நினைத்தனர். திமுக பக்கம் இருந்து பெரிய அளவு பதட்டமான அறிக்கை எதுவும் வராததால் ‘சப்’ பென்று ஆகிவிட்டது.
பாமகவுக்கு அழைப்பு விட்டிருந்தால் கூட பாராட்டு கிடைத்திருக்கும். ஏனெனில் மது ஒழிப்பு போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு பாமக பங்கெடுத்துள்ளது. மாறாக, ‘ சாதியும் போதை தான். பாமகவுக்கு அழைப்பு விடமாட்டோம் ‘ என்று பேசப்போய்,’ பாமக சாதிக் கட்சி என்றால், விசிக எந்த கட்சி?’ என்று வறட்டு ஜாதி அமைப்பை நடத்தும் கருணாஸ் கூட வரிந்து கட்டிக்கொண்டு கேட்கும் இழிநிலை ஆகிவிட்டது.

வேறு வழியின்றி, யாருக்கு பம்மாத்து காட்ட நினைத்தார்களோ, அவர்களையே சந்திக்க வேண்டியதாகிவிட்டது. ஸ்டாலினின் அமெரிக்க ரிட்டர்னை சாக்காக வைத்து அவரை பாராட்டப் போய் ( முதல்வர் அமெரிக்க பயணத்தை அவரது கட்சியே பேச முடியாத தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில் ), அப்படியே சந்தடி சாக்கில் மாநாட்டைப் பற்றி சொல்ல, ‘ அதுக்கு என்ன, ஆர் எஸ் பாரதியையும், டி கே எஸ் இளங்கோவனையும் அனுப்பி வைக்கிறேன் ஜமாய்ங்க’ என்று ஸ்டாலின் கூறிவிட, கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்த கதையாய், ‘மது பழக்கு ‘ கூட்டத்தை வைத்து ‘மதுவிலக்கு’ பேச வேண்டிய சங்கடம்.
ஆர் எஸ் பாரதியை அனுப்புவதற்கு பதிலாக, ‘ சிறந்த வடிப்பாளராக ‘ திகழும் டி ஆர் பாலு போன்றவர்களை அனுப்பி வைத்தாலாவது மாநாடு களைகட்டும் என்று மக்கள் விமர்சிக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது.
ஆரம்பத்திலிருந்தே திடம் இன்றி, தாழ்வு மனப்பான்மையுடனேயே மாநாட்டு ஏற்பாடுகளை செய்யும் திருமாவால், தான் எண்ணியதை ஈடேற்ற முடியாமல் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுவிட்டு, தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக,’ மது விற்பனை அளவை குறைக்க வேண்டும் ‘ என்று அடிக்குரலில் கெஞ்ச வேண்டியதாயிற்று.
போதாக்குறைக்கு அரசியல் சாசனத்தின் 47 வது பிரிவை வம்புக்கு இழுத்து, ‘ ஒன்றிய அரசு மதுவிலக்கு கொள்கை கொண்டு வர வேண்டும்’ என்று அஜண்டாவிலே இல்லாத புதிய கோரிக்கையை எழுப்ப வேண்டியதாயிற்று.
எப்படியோ, விஜய் அரசியல் கட்சி மாநாடு தகவலை விட, விசிக மதுவிலக்கு மாநாட்டு தகவல் மிகவும் சொதப்பலாக ஆகிவிட்டது.