கோவில்பட்டி இளையசரனேந்தல் பகுதி சுரங்கப் பாதையையொட்டிய இணைப்பு சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறானது.
இதுகுறித்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.ஜேன் கிறிஸ்டி தலைமையில் நகராட்சி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், நபார்டு வங்கி அதிகாரிகளிடை யே நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில், நகராட்சி கட்டுமானப் பிரிவு பொறியாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆக்கிரமிப்பு அளவீட்டு பணி நேற்று முன்தினம் பிற்பகலில் நடைபெற்றது.
அப்போது ஆக்கிரமிப்பு அளவீட்டு பணி செய்தியை சேகரித்துக் கொண்டிருந்த நியூஸ் 18 தொலைக்காட்சி கோட்ட செய்தியாளர் மகேஷ்வரனை, அதே பகுதி A1 டீஸ்டால் உரிமையாளரும் திமுக பிரமுகருமான கணேசனும் அவரது சகோதரர் சரவணனும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் . தாக்கவும் முயன்றுள்ளனர். சப் இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி மற்றும் முன்னிலையில் இது நடந்துள்ளது.

சாலை ஆக்கிரமிப்பு பற்றி செய்திகள் வெளியிட்டதாலேயே ஊடகவியலாளர் மகேஸ்வரன் மிரட்டப்பட்டுள்ளார். ஆக்கிரமிப்பாளருக்கு உடந்தையாக நகராட்சி பொறியாளர் கிருஷ்ண குமாரும் அவரை இழிவாகப் பேசி மிரட்டியுள்ளார்.
சம்பவம் குறித்து புகார் அளிக்க உடனடியாக மகேஸ்வரனும் சக பத்திரிகையாளர்களும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களைக் காக்க வைத்து மாலை ஐந்து மணிக்கு பின்பே போலீசார் புகார் மனுவை பெற்றுள்ளனர்.
ஆனாலும், கண்கண்ட சாட்சியாக நடந்த வன்முறை சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். ‘நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு’ என்பது போல, புதிதாக வந்துள்ள சட்டத்தை சாக்கிட்டு வழக்கு பதிவு செய்வதை தள்ளிப் போட்டுள்ளனர்.
இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து ஐந்தாவது தூண் அமைப்பைச் சேர்ந்த சங்கரலிங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஆர்டிஓவிடம் முறையிட்டனர். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எஸ் பி பாலாஜி சரவணனுக்கு கடிதம் அளித்தார். ஆனாலும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

இதனால் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்க பொதுச் செயலாளரும், பத்திரிகையாளர்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான அய்கோ,’ சமூக ஆர்வத்துடன் ஊடகப் பணி செய்த மகேஸ்வரன், அதிகாரிகள் முன்னால் ஆளுங்கட்சி பிரமுகரால் மிரட்டப்பட்டதும், கண்ணால் கண்ட சாட்சியான காவல் அலுவலர் வழக்கு பதிவு செய்ய மறுத்திருப்பதும் அதிகார அத்துமீறல். ஆட்சியாளர்கள் மீதான பத்திரிகையாளர்கள் நம்பிக்கையை இந்த சம்பவம் சிதைத்துள்ளது.
ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஊழல் பொறியாளர் கிருஷ்ணகுமாரை உடனடியாக நகராட்சி ஆணையர் ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும். மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் உடனடியாக இதில் தலையிட்டு, பத்திரிகையாளர்களை மிரட்டியவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும். போலீசார் உடனடியாக கணேசன் மற்றும் அவரது தம்பி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லா விட்டால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டம் நடத்தப்படும் . ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு வழக்காக இது எடுத்துச் செல்லப்படும். புதிய சட்டம் வழங்கியிருக்கும் அவகாசம், இது போன்ற நேரடி சாட்சியான குற்றச் செயல்களை வழக்குப்பதிவு செய்ய அல்ல என்பதை காவல்துறையினர் உணர வேண்டும் ‘என்றார்.