திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபி கே ஜெயக்குமார் தனசிங். இவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். போலீசாருக்கு புகார் சென்ற நிலையில் வீட்டுக்கு மிகவும் அருகிலேயே இருந்த தோட்டத்தில் உள்ள கிடங்கு ஒன்றிலிருந்து கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் எழுதியதாக கூறப்பட்ட இரு கடிதங்கள் அடிப்படையில், அவரது கட்சியினர் மற்றும் கடன் தாரர்கள் மீது போலிசாரின் சந்தேகம் நீண்டது. குறிப்பாக, கடிதத்தில் கண்ட கள்ளிக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் தலைமறைவானதால் அந்த சந்தேகம் வலுப்பெற்றது.
இந்நிலையில், அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவரது தொண்டைக்குள் பாத்திரம் துலக்கும் ஸ்கிராப்பர் இருந்தது. உடல் முட் கம்பியால் சுற்றப்பட்டு இருந்தது. சடலம் குப்புறக் கிடந்தது போன்ற காரணங்களாலும், வீட்டுக்கு மிக அருகில், சாலையில் செல்வோர் கவனிக்கத்தக்க வகையில் உடல் கிடந்ததால் நெருக்கமானவர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் யூகித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களாலேயே அவர் கொல்லப்பட்டதாக இப்போது போலீசார் கருதுகின்றனர். அவரது மனைவி மற்றும் மகன்களையும் தீவிரமாக குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர். திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் திசையன்விளையிலேயே தங்கி, நேரடி விசாரணையில் இறங்கி இருப்பதாலும், அமைக்கப்பட்ட ஏழு தனிப்படைகளும் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி இருப்பதாலும் சில மணி நேரங்களில் கொலையாளிகள் பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்று காவல்துறை தகவல் கூறுகிறது.