தாமிரபரணியில் இறங்கும் வேட்பாளர்களை மக்களிடம் கொண்டு செல்வோம் – பாதுகாப்பு இயக்கம் உறுதி

0
507

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் அய்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

கடந்த 12 ஆண்டுகளாக தாமிரபரணி மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம், தாமிரபரணிக்கான அமைப்புகளின் தாயகமாக விளங்குகிறது. எங்கள் இயக்கத்தின் சார்பில் 2011 முதல் ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் போதும் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்தை தாமிரபரணி மீது திருப்புவதற்கு பாடுபட்டு வருகிறோம்.

வேட்பாளர்களை நேரில் சந்தித்தும், ஒருங்கிணைத்து ஒரே மேடையில் ஏற்றியும் தாமிரபரணியை புனரமைக்க வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொருவரிடமும் தாமிரபரணி பாதுகாப்பு உறுதிமொழியும் பெறுகிறோம் .

இம்முறை , வேட்பாளர்களை மட்டுமின்றி, அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையையும் அணுகி, தேர்தல் அறிக்கையில்’ தாமிரபரணியை பழைய நிலைக்கு மீட்டு, நிரந்தரமாக பாதுகாக்கும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவோம்’ என்று உறுதியளிக்க கோரிக்கை விடுத்தோம்.

தற்போது, நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக, காங்கிரஸ்,பாஜக, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் எங்கள் கோரிக்கையின் அடிப்படையில் தாமிரபரணி மீட்புக்காக பாடுபட உறுதியளித்துள்ளனர். எஸ்டி பிஐ கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தாமிரபரணி மீட்பு பற்றி உறுதியளித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் இயக்கத்தின் சார்பிலும், தாமிரபரணி தாயின் கருணையில் வாழும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் அவர்கள் அனைவரையும் சந்தித்து எங்களது இயக்கத்தின் சார்பில் கௌரவிப்போம்.

அதே சமயத்தில், தாமிரபரணியால் தாகம் தீர்த்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே கடலில் சங்கமித்து, தமிழ்நாட்டுக்கே பொதுச் சொத்தாக விளங்கும் தாமிரபரணியை இந்த மோசமான நிலையில் இருந்து மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும்.

குறிப்பாக, குடிநீரோடு, விவசாயம், தொழில், வாழ்வாதாரம் அனைத்தையும் தாமிரபரணியால் பெற்று அனுபவிக்கின்ற தென்காசி தூத்துக்குடி வேட்பாளர்கள் நிச்சயம் தங்களுடைய வாக்குறுதியை தர வேண்டும்.

தங்கள் வாக்குறுதிக்கு வலு சேர்க்கும் வகையில் எந்த வேட்பாளராவது, வாக்கு சேகரிப்பு பணிக்கு இடையே , அருகிலேயே ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணியின் ஏதாவது ஒரு இடத்தில் இறங்கி, அதைப் பார்வையிட்டு படம் பிடித்து , அந்தச் சூழல் பற்றி தங்கள் கருத்தையும் கூறுவார்களேயானால், எமது இயக்கம் சார்பில் அதை ஐந்து லட்சம் பிரதிகள் எடுத்து, மக்களிடம் விநியோகிப்போம்.

இவ்வாறு அய்கோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here